Loading

புதன், 20 அக்டோபர், 2010

உலகின் மிக நீளமான சுரங்க வழி

ஐரோப்பாவின் நீளமான மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்க வழியின் பணிகளை சுவிஸ் நாட்டுப் பொறியாளர்கள் நிறைவு செய்துள்ளனர்.

சுவிஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் வடக்கே உள்ள எர்ஸ்ஃபெல்ட் என்ற நகரையும் தெற்குப் பகுதியில் உள்ள போடியோ என்ற நகரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையின் நீளம் 57 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த சுரங்கப் பாதையை நிர்மாணிக்க 14 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்தாலும் 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தப் பாதை பயன்படுத்தப்படாது.

கோதர்ட் இரயில்வே சுரங்கப்பாதை என்றழைக்கப்படும் இந்தச் சுரங்கப் பாதை சுமார் 60 ஆண்டுகாலத் திட்டமாகும். இத்திட்டத்திற்கு சுமார் 10 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் (சுமார் 10.4. பில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவிடப்பட்டுள்ளன. இந்தப் பாதை நிறைவு பெற்றதை அடுத்து உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையாக இதுவரை அறியப்பட்டு வந்த ஜப்பானின் செய்கான சுரங்கப்பாதையை கோதர்ட் முறியடித்துள்ளது.

250 கிலோ மீட்டர் வேகத்தில் பன்னாட்டு விரைவு இரயில்கள் செல்லும் வகையில் இப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை வழியாக ஜூரிச் நகரில் இருந்து மிலன் நகருக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிட முடியும். தற்போது வேறு வழிகளில் செல்வதால் ஆகும் நேரம் 3 மணி 40 நிமிடங்களில் இருந்து 4 மணி 30 நிமிடங்கள் வரை ஆகின்றன.

நெதர்லாந்தின் துறைமுகமான ரோட்டர்டாமில் இருந்து இத்தாலியின் துறைமுகமான ஜெனோவா நகருக்கு கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பொருள்கள் இனி இந்த சுரங்கப் பாதை வழியாக எடுத்துச் செல்லப்படும் என்று கூறப்படுகிறது. நாளொன்று இந்தச் சுரங்கப் பாதை வழியாக 300 இரயில்கள் பயணிக்கலாம்.

இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் சுமார் 2,500 சுரங்கப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் எட்டு பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர்.

சுரங்கப் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றதை ஒட்டி நிகழ்ந்த விழா சுவிஸ் நாட்டுத் தொலைக் காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக