Loading

புதன், 7 செப்டம்பர், 2011

மின்சாரமின்றி கிராமங்கள்: 21ம் நூற்றாண்டிலும் ஒளிராத இந்தியா


சென்னை: இந்தியாவில் 15 ஆயிரம் கிராமங்களிலும், 65 லட்சம் வீடுகளிலும் மின் இணைப்பு கிடைக்காததால், இருளில் மூழ்கியுள்ளன. தமிழகத்தில் 150 கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
அனைத்து கிராமங்கள்
, நகரங்களுக்கும் மின் இணைப்பு கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ராஜிவ் கிராமப்புற மின்வசதி திட்டம் வகுக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் மின் வசதி இல்லாத கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு மின் வசதி தரப்படுகிறது.இத்திட்டத்தில், இந்தியா முழுவதும் மின் வசதி ஏற்படுத்த வேண்டிய கிராமங்கள் மற்றும் வீடுகள் குறித்த பட்டியலை, ஒவ்வொரு மாநில மின்துறைக்கு, மத்திய மின்துறை அனுப்பி வருகிறது. இதன்படி, தமிழகத்தில் அனைத்து வீடுகள் மற்றும் கிராமங்களில் மின்வசதி உள்ளதாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால் மதுரை, தேனி, திருவண்ணாமலை, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், 115 குக்கிராமங்களில், மின்வசதி இல்லையென, தமிழக சட்டசபையில் கூறப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில், விரைவில் மின்வசதி ஏற்படுத்தப்படும் என, மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார். உண்மையில், தமிழகம் முழுவதும் நீலகிரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சேர்த்து, 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வசதி இல்லையென, தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, எரிசக்தித் துறை உயரதிகாரி கூறியதாவது: குக்கிராமங்கள், மலைவாழ் பகுதிகளில் மின் வசதி செய்யும் பணிகளை, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) மேற்கொள்கிறது. மின் வாரிய சப்ளை கொடுக்க, அந்த பகுதி வழியே மின் கம்பி, மின் கடத்தி பாதைகள் இருக்க வேண்டும். பெரும்பாலான குக்கிராமங்கள், மலைவாழ் பகுதிகளில், இந்த வசதிகள் இல்லாததால், மின் வாரியத்தால் சப்ளை தர முடியாது.ஆனால், மத்திய அரசின் உதவியுடன் தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையின் சார்பில், மின் வசதி ஏற்படுத்தப்படும். சூரிய மின்சக்தி, சிறிய வகை நீர் மின் நிலையம், காஸ் மின் உற்பத்தி நிலையங்களை குக்கிராமங்கள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் அமைத்து, மின் சப்ளை தரப்படும். விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் இயற்கை சூழலை கருத்தில் கொண்டு, பல கிராமங்களில் மின் சப்ளை செய்ய வனத்துறை அனுமதிப்பதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம் வெளியிட்ட பட்டியலின் படி, இந்தியா முழுவதும் 15 ஆயிரம் கிராமங்களிலும், 64.79 லட்சம் வீடுகளிலும், மின் இணைப்புகள் கொடுக்கப்படாமல் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், வல்லரசாக அடிவைக்கும் நிலையிலும், மின்வசதி இல்லாத ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.இந்தியாவில் பா.ஜ., ஆட்சி முடிந்து, 2004ல் பார்லிமென்ட் தேர்தல் வந்தபோது,"இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்தை எழுப்பியது. இந்த கோஷம் எழும்பி, ஏழு ஆண்டுகள் ஆன நிலையிலும், கிராமப்புற வளர்ச்சியை தனது லட்சியமாக அறிவித்த நேரு மற்றும் ராஜிவின் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையிலும், மின் வசதியின்றி, இந்தியா ஒளிராமல் இருப்பது தான், ஆச்சர்யமான வேதனையைத் தருகிறது.

அரசுத் துறைகளின் அலட்சியம் காரணம்:தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையை பொறுத்தவரை, குக்கிராமங்கள் மற்றும் மலைவாழ் பகுதிகளில் மின் இணைப்பு தர, அதிக சிரத்தை எடுப்பதில்லை; இதற்கு, மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதுகுறித்து, எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,"எரிசக்தி மேம்பாட்டு முகமையை பொறுத்தவரை, கிராமப்புற மின்மயமாக்கல் திட்டத்தையும், ராஜிவ் கிராமப்புற மின்வசதி திட்டத்தையும், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து செயல்படுத்துகிறது.இதில், மற்ற துறைகளிலிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால், பல கிராமங்கள் எங்களுக்குத் தெரியாமலேயே மின்வசதி செய்யப்படாமல் உள்ளன' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக