Loading

செவ்வாய், 19 அக்டோபர், 2010

புகையிலைக்கு எதிராக ஜிஹாத் - குலாம் நபி ஆசாத்!

"புகையிலைக்கு எதிராக ஜிஹாத் செய்ய வேண்டும்" என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய ரீதியாக புகையிலை பயன்படுத்துபவர்கள் பற்றி 19.10.10 அன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் ஏறத்தாழ 27 கோடி இந்தியர்கள் புகையிலையைப் பயன்படுத்தும் அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
வருடந்தோறும் 55 லட்சம் மக்கள் புகையிலை உபயோகிப்பது காரணமாக மரணிப்பதாகவும் அதில் 9 லட்சம் பேர் இந்தியாவைச் சார்ந்தவர்கள் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பை International Institure for Population Sciences என்ற தனியார் நிறுவனம் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கிணங்க நடத்தியது.
இந்தத் தகவல்கள் வெளியானதையடுத்து  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவிக்கையில், "புகையிலைக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஜிஹாத் செய்ய வேண்டும்" என தெரிவித்தார். மேலும், "புகையிலை உற்பத்தியிலும் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களால் மரணமடையும் மொத்த மக்களை விட அதிகமானோர் புகையிலையினால் இறக்கின்றனர்" என்றும் ஆசாத் கூறினார்.
புகையிலை உபயோகிப்பவர்களில் 15 சதவிகிதமானோர் 15 வயதுக்குட்பட்டவர்கள். 25 சதவிகிதமானோர் 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள். 19 சதவிகிதமானோர் 18-19 வயதுக்குட்பட்டவர்கள். பெண்களும் அதிகளவில் புகையிலையை உபயோகிப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
முன்னேறிய நாடுகள் புகையிலை மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால், வளரும் நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் அதிகளவில் புகையிலையை உற்பத்தி செய்து வருவதாக குலாம் நபி ஆசாத் கூறினார். சிகரெட் கட்டுக்களில் எழுதப்படும் எச்சரிக்கையால் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. அதுபோல் பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடையும் முழுமையாக நடைமுறையில் இல்லை. 29 சதவிகித மக்கள் மற்றவர்கள் விடும் புகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் வேலை பார்க்கும் இடங்களில் பாதிக்கப்படுபவர்கள் 26.1 சதவிகிதம். 52.2 சதவிகிதம் பேர் வீடுகளில் மூச்சு முட்டிக் கொண்டிருக்கின்றனர். மேலும் பேருந்துகள் மற்றும் உணவகங்களிலும் அதிகம் பேர் பிறரின் புகையை சுவாசித்துக் கொண்டிருக்கும் அபாயத்தில் உள்ளனர்.
இந்தியாவில் மிசோராம் மாநிலம்தான் புகைப்பதில் முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாழ 40 சதவிகித மக்கள் இங்குப் புகையிலையை உபயோகிக்கின்றனர். கோவாவில் ஆகக்குறைவாக 4.8 சதவிகிதத்தினர் இதனைப் பயன்படுத்துகின்றனர். புகையிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சகம் வேளாண் அமைச்சகத்துடன் இணைந்து ஒரு திட்டத்தை தயார் செய்து கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
15 வயதுக்கு மேற்பட்ட 69,926 நபர்களிடம் நேரடியாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் கணிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 33,767 ஆண்களும் 35,529 பெண்களும் அடங்குவர்.
புகையிலைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக