Loading

புதன், 7 செப்டம்பர், 2011

டெல்லி ஐகோர்ட்டில் குண்டு வெடித்து 9 பேர் பலி; 45 பேர் காயம்



டெல்லி ஷெர்ஷா சாலையில் டெல்லி மாநில ஐகோர்ட்டு உள்ளது, 18 நீதிபதிகளை கொண்ட இந்த ஐகோர்ட்டு பிரமாண்ட வளாகத்தில் கட்டப் பட் டுள்ளது. பல முக்கிய வழக்குகள் நடப்பதால், இந்த ஐகோர்ட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணி முதல் வழக்கம் போல நீதிபதிகளும், வக்கீல்களும் ஐகோர்ட்டுக்கு வரத் தொடங்கினார்கள். கோர்ட்டின் எல்லா நுழைவாயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


காலை 10.17 மணியளவில் 5-ம் எண் நுழைவாயில் அருகே மிகவும் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பயங்கரமாக வெடித்தது. குண்டு வெடித்த சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்டது. குண்டு வெடிப்பில் பலத்த அதிர்வு ஏற்பட்டு ஐகோர்ட்டு வளாகமே குலுங்கியது.

மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். குண்டு வெடித்த இடத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் சுமார் 45 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய படி கிடந்தனர். மீண்டும் குண்டு வெடிக்கலாம் என்ற பயத்தில் மக்கள் கோர்ட் அறைகளில் இருந்து வெளியேறி ஓடினார்கள்.

குண்டு வெடித்த தகவல் அறிந்ததும் டெல்லி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஷெர்ஷா சூரி சாலை பகுதிக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு 2 வேன்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்திரபிரஸ்தாவில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனை, ராம்மனோகர் லோகியா மருத்துவமனை, மற்றும் சப்தர்ஜங் மருத்துவ மனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் 9 பேர் பலியாகி விட்டனர். மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இன்று வெடித்த குண்டு, ஒரு சூட்கேசில் வைத்து எடுத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. உருக்குலைந்து கிடக்கும் ஒரு சூட் கேசை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

குண்டு வெடித்த இடத்தை டெல்லி போலீசார் முற்று கையிட்டுள்ளனர். நாலா புறமும் தடுப்பு ஏற்படுத்தி அவர்கள் வெடிகுண்டு சிதறல்களை சேகரித்து வருகிறார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீவிரவாத தடுப்பிரிவை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கடந்த மே மாதம் 25-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு 7-வது எண்கேட் அருகே ஒரு குண்டு வெடித்தது. மிகவும் சக்தி குறைந்த அந்த குண்டு வெடிப்பால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இன்று வைக்கப்பட்ட குண்டு மிக, மிக சக்தி வாய்ந்தது என்பதால் 25-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. டெல்லியில் கடந்த 4 மாதங்களுக்குள் நடந்துள்ள இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவம் இது வாகும். இதனால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக