பாபா ராம்தேவுக்கு கோடிக்கணக்கில் பணம் வந்தது எப்படி என்று வருமானவரித்துறையும், மத்திய அமலாக்கத்துறையும் விசாரணைசெய்ய உள்ளன. கருப்புப்பணத்தை ஒழிக்க வலியுறுத்தி பாபா ராம்தேவ் இருந்த உண்ணாவிரதம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மூலம்முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பும்ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளது.
கருப்புப்பணத்தை ஒழிக்க வலியுறுத்தி ஜூன் 4 ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கடந்த மாதம் முதல் வாரத்தில் அறிவித்து இருந்தார் யோகா குருவான பாபா ராம்தேவ். இதனைத் தொடர்ந்து அவருடைய உண்ணாவிரதத்தை தவிர்க்கும் பொருட்டு அவருடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மத்திய அமைச்சர்களான கபில் சிபல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் பாபா ராம்தேவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் காலை முதல் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் பாபா ராம்தேவ். அவருடன் சுமார் ஐம்பதாயிரம் பேர் அந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் டெல்லி நகர போலீசாரும், அதிரடிப் போலீசாரும் பாபா ராம்தேவிடம் வந்து அவரது உண்ணாவிரதத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகக் கூறி அவரை உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ள வற்புறுத்தினர். அதற்கு மறுத்து விட்ட பாபா ராம்தேவ், தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் சென்று ஒளிந்து கொண்டார். எனினும், விடாத போலீசார் அவரைத் தேடத்தொடங்கினர். அப்பொழுது போலீசார் ராம்தேவின் ஆதரவாளர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாபா ராம்தேவின் ஆதரவாளர்களும் போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்திய போலீசார், பாபா ராம்தேவைக் கண்டுபிடித்து அழைத்து சென்றனர்.
டெல்லிக்கு வெளியில் அழைத்து செல்லப்பட்ட பாபா ராம்தேவ், அடுத்த 15 நாட்களுக்கு டெல்லி நகருக்குள் வரக்கூடாது என்ற அறிவுறுத்தலோடு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர் தன்னுடைய தலைமை பீடம் இருக்கும் ஹரித்துவாருக்கு சென்ற பாபா ராம்தேவ், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பொழுது, தன்னைக் கொலை செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டி வருவதாகவும், தன்னுடைய உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு மத்திய அரசும், சோனியாவும் தான் பொறுப்பு என்றும் கூறியுள்ளார். மேலும், தான் மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுதே, தான் அவர்களால் மிரட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாபா ராம்தேவ் பற்றி செய்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, பாபா ராம்தேவ் ஒரு ஏமாற்றுக்காரர் என்று அவரை விமர்சித்துள்ளது. முதலில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அவர் ஒப்புக்கொண்டதாகவும், எனினும் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய அவர், பின்னர் அன்று மாலையே உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக உறுதி அளித்து இருந்ததாகவும், அவரது கோரிக்கைகளை ஏற்ற பின்னரும் அவர் தன்னுடைய உண்ணாவிரதத்தைக் கைவிடாமல் தொடர்ந்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கும், போலீசாரின் நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, யோகா வகுப்புகள் நடத்த என்று அனுமதி வாங்கி விட்டு பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவுக்கு என்று சட்டங்கள் உள்ளது என்றும், தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி, அதனால் கலவரம் ஏற்பட அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில், பாபா ராம்தேவுக்கு உண்ணாவிரதம் இருக்க கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வந்தது என்பது பற்றியும், யோகா வகுப்புகள் நடத்தும் அவரால் எவ்வாறு ஆயிரக்கணக்கான கோடிகள் சேர்க்க முடிந்தது என்பது பற்றியும், அவருக்கு சொந்தமான டிரஸ்டில் கறுப்புப் பணம் உள்ளதா? என்றும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்திய வருமான வரித்துறையும், மத்திய அமலாக்கத்துறையும் அறிவித்துள்ளன. இதன் மூலம், காங்கிரஸ் கட்சி தனக்கு வேண்டியவர்கள் மேல் அரசு எந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்று தெரிகிறது என்று கூறுகிறார்கள் நடுநிலையாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக