Loading

புதன், 1 ஜூன், 2011

மீண்டும் உயர்ந்தது பெட்ரோல் விலை...




புதுடில்லி : பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி, 15 நாட்களே ஆன நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக இன்று முதல் உயர்த்தப்படுகிறது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 35 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், டீசல் , காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த அமைச்சர்கள் குழு, வரும் 9ம் தேதி கூடுகிறது.

பெட்ரோல் விலை கடைசியாக, மே 15ம் தேதி லிட்டருக்கு ரூ.5 வீதம் உயர்த்தப்பட்டது. அப்போதே இந்த விலை உயர்வு, நஷ்டத்தை ஈடுகட்ட போதாது, இன்னும் சில நாட்களில் அடுத்த உயர்வு இருக்கும் என
, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள்நாட்டில் பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள முடியும். அதன்படி, சர்வதேச சந்தையில், இதுவரை இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்த, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. ஆனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தின. இது கடந்த 14ம் தேதி நள்ளிரவுக்கு பின், அமலுக்கு வந்தது. இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "எங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே உயர்த்தியுள்ளோம். விரைவில், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படும்' என, குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்( ஐ.ஓ.சி.,), பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் 35 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும். இது, இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்துவிட்டது. பொதுவாக இந்த விலை உயர்வை ஒரு எண்ணெய் நிறுவனம் அறிவித்தால், மற்ற மூன்று நிறுவனங்களும் அப்படியே பின்பற்றும்.லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி, 15 நாட்களேயான நிலையில், மேலும் ஒரு விலை உயர்வை சந்திப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.இரண்டாவது முறையாக ஏற்றிய பிறகும், எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் நஷ்டம் தொடர்கிறதாம்.

டீசல் விலை: இந்த விலை உயர்வு இதோடு நிற்காதாம். டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலையையும் அதிகரிக்கும் வரை தொடருமாம். வரும் 9ம் தேதி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூடி, டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சிகள் எதிர்ப்பு: பெட்ரோல் விலையை இரண்டாவது முறையாக உயர்த்துவதற்கு, அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, இதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வால், பணவீக்கம் மேலும் உயரும். இதனால், மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய ஓட்டையே விழும் என, குறிப்பிட்டுள்ளது. மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசு உடனடியாக இந்த விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி, பகுஜன் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக