Loading

வியாழன், 5 மே, 2011

எந்த குறைபாடுகளும் இல்லாமல் நடுநிலையுடன் வாக்கு எண்ணப்படும்: தேர்தல் கமிஷனர்



தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13 ம் திகதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 13 ம் திகதி நடைபெறுகிறது.
234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னனு எந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்க எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் அருகே மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினரும், அடுத்து எல்லை பாதுகாப்பு படையினரும் வெளியே உள்ளூர் பொலிசும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.


கட்சி ஏஜெண்டுகளும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 8 நாட்களே உள்ளன. எனவே அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 234 தொகுதிகளுக்கான வாக்குகளும் மொத்தம் 91 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வாக்குகளும் 3 மையங்களில் எண்ணப்படுகின்றன. லயோலா கல்லூரியில் 7 தொகுதிகளுக்கும், கிண்டி அண்ணா பொறியியல் கல்லூரியில் 5 தொகுதிகளுக்கும், ராணிமேரி கல்லூரியில் 4 தொகுதிகளுக்கும் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இது போல 234 தொகுதிகளுக்கும் 91 மையங்களில் ஓட்டுக்களை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்படுகிறது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வீடியோ கமெரா அமைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை பதிவு செய்யப்படுகிறது. இதை நேரடியாக காணும் வகையில் எல்.சி.டி. தொலைக்காட்சிகளும் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளரும், அனைத்து மேஜைகளையும் பார்வையிட ஒரு அதிகாரியும், தொகுதிக்கு ஒரு தேர்தல் அதிகாரியும் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒப்புதல் கொடுத்த பிறகே ஒரு ரவுண்டில் எண்ணப்படும் வாக்கு விவரம் வெளியிடப்படும். இது கணணியில் பதிவு செய்யப்பட்ட பின் கரும்பலகையிலும் எழுதப்படும்.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஒவ்வொரு ரவுண்டும் முடிந்த பிறகு முடிவுகள் வெளியிடப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள ஒலிபெருக்கியிலும் வாக்கு எண்ணிக்கை முடிவு விவரம் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிப்பதற்காக அனைத்து மையங்களிலும் “வெப் கமெரா”வும் பொருத்தப்படுகிறது. அனுமதி பெற்ற கட்சி ஏஜெண்டுகள் மட்டுமே வாக்கு எண்ணும் இடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு உரிய அனுமதி அட்டையுடன் தான் உள்ளே செல்ல முடியும். வாக்கு எண்ணும் மையத்துக்குள் கைப்பேசி கொண்டு போக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைக்கப்படும் தகவல் மையத்தில் பத்திரிகையாளர்கள் மட்டும் கைப்பேசி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் இடங்களுக்கு செல்லும் கட்சி ஏஜெண்டுகளுக்கு முன்பு அந்தந்த கட்சி சார்பில் உணவு வழங்கப்படும். தற்போது அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு, தண்ணீர் பாட்டில்களும் தேர்தல் கமிஷன் மூலமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து மையங்களிலும் வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நேரில் பார்வையிட்டு வருகிறார்.

“எந்த குறைபாடுகளும் இல்லாமல் நடுநிலையுடன் வாக்கு எண்ணப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மாவட்ட கலெக்டர்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கொமிஷனர் உத்தரவிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது குறிப்பிட்ட இடத்தில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ள முடியாத வகையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன என்றாலும் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் வாக்குகளும் சரியாக உள்ளதா? என்பது முறைப்படி சரிபார்க்கப்படும்.

வாக்குகளை எண்ணுவது எப்படி? தேர்தல் அதிகாரிகள் கடமை என்ன? என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவற்றையும் தமிழக தலைமை தேர்தல் கொமிஷனர் பிரவீண்குமார் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். 13ம் திகதி அன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே ஓரளவு முடிவுகள் வெளியாகி விடும். எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதை யூகித்து விடலாம். 11 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளுக்கு முடிவுகள் தெரிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக