Loading

ஞாயிறு, 29 மே, 2011

பாஜக தலைவர்கள் ஜேட்லி-சுஷ்மா மோதல்


கர்நாடக அமைச்சர்கள் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ்- அருண்ஜேட்லி ஆகியோரிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, இரு தலைவர்களிடையே மோதலை உருவாக்கியுள்ளது.





கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஊழல் மிகுந்த அரசாக உள்ளது. பாஜக அரசின் ஊழலுக்கு மூல காரணமாக இருப்பவர்கள் எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ரெட்டி சகோதரர்களான கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களது ஊழலுக்கு பக்கபலமாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் இருந்து வருகிறார் என்றும், ரெட்டி சகோதரர்கள் அமைச்சரவையில் சேர சுஷ்மாவே காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.



இந்த குற்றச்சாட்டை இப்போது மறுத்துள்ள சுஷ்மா, ரெட்டி சகோதரர்கள் அமைச்சரவையில் சேர மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லியே காரணம் என தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றுக்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "எடியூரப்பா அமைச்சரவையில் ரெட்டி சகோதரர்கள் சேர நான் எந்தவகையிலும் காரணமில்லை. அவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று

நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. மாறாக அருண்ஜேட்லி, முதல்வர் எடியூரப்பா, அனந்தகுமார் மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோரே ரெட்டி சகோதர்களை அமைச்சரவையில் சேர்க்க பரிந்துரைத்தனர்.


முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை நீக்க ரெட்டி சகோதர்கள் போர்க்கொடி உயர்த்தியபோது, அப்போதைய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டதால்தான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேனே தவிர அவர்களை பாதுகாக்க அந்த விவகாரத்தில் தலையிடவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத்சிங் மறுப்பு: ரெட்டி சகோதரர்கள் விவகாரத்தில் சுஷ்மா- அருண்ஜேட்லி இடையே மோதல் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை முன்னாள் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், சுஷ்மா-அருண்ஜேட்லி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது.


கர்நாடகத்தில் பாஜக அரசு அமைந்தபோது அக்கட்சியின் தேசியத் தலைவராக நான் இருந்தேன். அப்போது கர்நாடக பாஜக பொறுப்பாளராக அருண்ஜேட்லியை நான்தான் நியமித்தேன்.



ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்க்கும் விவகாரத்தில் அவர் ஆலோசனைகள் வழங்கியிருக்கலாம். ஆனால் அவர் நிர்ப்பந்தம் செய்யவில்லை. இதில் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார்.



அருண்ஜேட்லி மெüனம்: சுஷ்மாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து அருண்ஜேட்லி இதுவரைகருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

எடியூரப்பா அறிவிப்பு: இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக எடியூரப்பா கூறுகையில், ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்க்க யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை. முதல்வர் என்ற முறையில் அமைச்சரவையில் யாரையும் சேர்க்க எனக்கு தனிப்பட்ட அதிகாரம் உண்டு.


அதன்அடிப்படையிலேயே அவர்களை அமைச்சரவையில் சேர்த்தேன் என்றார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், பாஜக தலைவர்கள் சுஷ்மா, அருண்ஜேட்லி இடையே ஏற்பட்டுள்ள மோதல் அவர்களகுக்கு இடையே உள்ள பண விவகாரத்தால் ஏற்பட்டது தெளிவாகிறது. ஊழல் பிரச்னையில் கர்நாடகம் எரிந்து கொண்டிருக்கும்போது தில்லியில் உள்ள பாஜக தலைவர்கள் அதுபற்றி கவலைப்படாமல் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஷகீல் அகமது கூறுகையில், இது பாஜகவில் நடக்கும் உள்நாட்டுப்போர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக