Loading

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

லிபியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!!!


லிபியாவின் சர்வாதிகாரி மம்மர் கடாஃபிக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்பு வலுத்திருக்கிறது. அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதுடன், கடாஃபியின் சொத்துக்களையும் முடக்கியிருக்கிறது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் லிபியாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பும் விரைவில் பொருளாதாரத் தடைகளை அறிவிக்க இருக்கிறது. ஐ.நா. லிபியா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஆலோசித்து வருகிறது.

இதன் பிறகும் கடாஃபி தனது நிலையிலிருந்து இறங்கி வரவில்லை. அரசு டி.வி.யில் சனிக்கிழமை பேசிய அவர் "எல்லா வன்முறைகளையும் அடக்குவோம். நான் மக்கள் மத்தியில் இருக்கிறேன். தொடர்ந்து போராடுவேன். எந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளையும் தோற்கடிப்போம்' என்றார்.
முன்னதாக திரிபோலி பசுமை சதுக்கத்தில் கடாஃபி அரசுக்கு எதிரான பல்லாயிரக் கணக்கானோர் கூடி தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் அவர்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினர். இதில் பலர் இறந்தனர். உலகம் முழுவதும் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லிபியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதாகவும், நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
திரிபோலி போலவே நாட்டின் பிற பகுதிகளிலும் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
அமெரிக்கா பொருளாதாரத் தடை: போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தின் துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து, லிபியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்திருக்கிறது. இதற்கான அரசு உத்தரவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளிக்கிழமை இரவு பிறப்பித்தார்.
"எல்லா வகையிலும் மம்மர் கடாஃபியின் அரசு சர்வதேச விதிமுறைகளையும், வழக்கமான மரபுகளையும் மீறிவிட்டது.
அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அதனால் கடாஃபி அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது' என்று ஒபாமா வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.
கடாஃபி, அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் பெயரில் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களும் இந்த உத்தரவின் மூலம் முடக்கப்படுகிறது.
அமெரிக்கா தூதரகம் மூடல்: திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதுடன், லிபியாவுடனான ராணுவ உறவுகளையும் அமெரிக்கா முறித்துக் கொண்டுள்ளது.
தூதரக அதிகாரிகள் அனைவரும் நாடு திரும்பிவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே தெரிவித்தார்.
விருப்பம் தெரிவித்த அனைத்து அமெரிக்கர்களும் லிபியாவிலிருந்து நாடு திரும்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய கூட்டமைப்பு: லிபியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பும் நடவடிக்கை எடுக்கத் தயாராகிவருகிறது.
இதுவரை, லிபியாவுக்கு எதிரான பொருளாதார தடைகள் அனைத்தும் தெற்கு ஐரோப்பிய நாடுகளால் தடுக்கப்பட்டு வருகின்றன. லிபியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்தால் அந்நாட்டில் இருந்து அகதிகள் வந்து தங்கள் நாட்டில் குடியேறுவார்கள் என்கிற அச்சமே இதற்குக் காரணம்.
தற்போதைய நிலையில், லிபியா மீது அடுத்தவாரம் முறைப்படி பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஐ.நா.மனித உரிமை அமைப்பு: ஐ.நா.மனித உரிமை அமைப்பிலிருந்து லிபியாவை தற்காலிகமாக நீக்கும் தீர்மானத்தை அந்த அமைப்பு நிறைவேற்றியிருக்கிறது. லிபியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயேச்சையான விசாரணை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
எனினும், இந்த தீர்மானங்கள் ஐ.நா. பொது அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் அமலுக்கு வரும். மனித உரிமை அமைப்பின் இந்தத் தீர்மானத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி வரவேற்றுள்ளார்.
பாதுகாப்பு அவையில் கண்ணீர் விட்ட லிபிய தூதர்: லிபிய நிலைமை குறித்து விவாதிப்பதற்காக பாதுகாப்பு அவையின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. இதில் பேசிய ஐ.நா.வுக்கான லிபிய தூதர் முகமது ஷால்கம் தனது பேச்சின்போது அழுது கண்ணீர் வடித்தார்.
கடாஃபிக்கு எதிராக உடனடியாக உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கோரிய அவர், "நாங்கள் உங்களை ஆட்சி செய்வோம் அல்லது உங்களைக் கொல்வோம்' என கடாஃபியும் அவரது மகனும் நாட்டு மக்களை எச்சரித்திருப்பதாகக் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக