ஈழத்து முஸ்லீம்கள் என்று இந்த மக்கள் அழைக்கப்படுகிறார்கள். மீண்டும் தங்கள் நிலத்தில் வாழும் பெருங்கனவுடன் திரும்பியிருக்கிறார்கள். உருக்குலைந்து போயிருக்கும் அவர்களின் இருப்பிடங்கள்தான் அவர்களை வரவேற்றிருக்கின்றன. மீள்குடியேறிய மக்;களுக்கு உரிய வதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.
நிலம் திரும்பியுள்ள சூழலில் தொடர்ந்தும் அவல வாழ்க்கையை வாழ்கிறார்கள். எங்கள் ஊருக்குத் திரும்புகிறோம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் வந்தோம் ஆனால் இங்கு எங்களை கவனிப்பவர்கள் யாருமில்லை என்று குறிப்பிடுகிறார் எஸ்.எச் வாக்டீன். எந்த விதமான வசதிகளோ ஒழுங்குகளோ செய்து கொடுக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் முகாமைப்போன்ற இருப்பிடங்களில் இருந்து கொண்டு அகதியைப்போல அலைகிறார்கள்.
புத்தளம் முதல் நீர்கொழும்பு என்று 15 முகாங்களுக்கு மேல் இருக்கின்றன. இடம்பெயர்ந்திருந்த பொழுது இருந்த குழந்தைகள் எல்லாம் இப்பொழுது பெரியவர்களாகி குழந்தை குட்டிகளுடன் இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார் அபூபக்கர். நாங்கள் வடக்கிற்கு வெளியில் வாழ்ந்த பொழுது எங்களை 'யாழ்ப்பாணத்தவர்கள்' என்ற அடையாளத்தோடுதான் பார்த்தார்கள் என்று குறிப்பிட்டதுடன் விசாரணைகளும் சோதனைகளும் 'யாழ்ப்பாணத்தவர்' என்ற அடையாளத்தினால் மிகவும் கடுமையாக இருந்தது என்றும் தமிழ் மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளையும் நாங்களும் எதிர்கொண்டோம் என்றும் அபூபக்கர் குறிப்பிட்டார். தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் ஒடுக்கப்படுகிறோம் என்றார் அவர்.
தற்பொழுது மதிரிஷா முஸ்லீம் கலவன் பாடசாலை, ஒஸ்மானி கல்லூரி போன்ற சில பாடசாலைகளிலும் உருக்குலையாத பள்ளிகளிலும் மீளக்குடியேற வந்துள்ள முஸ்லீம் மக்கள் தங்கியிருக்கிறார்கள். சரிபா என்ற தாயார் தற்பொழுது மதிரிஷா முஸ்லீம் பாடசாலையில் தங்கியிருக்கிறார். புத்தளத்தில் சதாமியபுரம் என்ற முகாமில் வாழ்ந்து வந்ததாக குறிப்பீட் முகமட் சரிபா யாழ்ப்பாணத்திற்கு தாங்கள் திரும்பி இரண்டு மாதங்கள் ஆகின்றன என்று குறிப்பிடடார். தங்களில் தற்பொழுது அரைவாசிப்பேர் யாழ்ப்பாணத்திற்கு திரும்பியுள்ளதாகவும் அரைவாசிப்பேர் இன்னும் புத்தளத்தில்தான் தங்கியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார் சரிபா என்ற தாய்.
இரண்டு மாதங்களாகியும் தங்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் தங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கான சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கபடப்டவில்லை என்றும் குறிப்பிட்ட சரிபா மிகவும் பாதுகாப்பற்ற இடத்தில் தாங்கள் தங்கியிருப்பதாக தெரிவித்தார். வயது வந்த பிள்ளைகளை இன்னும் அழைத்துவரவில்லை என்றும் அவர் சொல்கிறார். மதிரிஷா முஸ்லீம் பாடசாலையின் மேற்பாகங்கள் உருக்குலைந்து போயிருக்கின்றன. அதன் கீழ்ப்பகுதியில் உள்ள சில வகுப்பறைகளில் சீலை துணிகளாலும் தறப்பாள் துண்டுகளாலும் மறைக்கப்பட்ட இடத்தில் அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவை எங்களுக்கு புதிய இடம் என்று குறிப்பிடுகிறார்கள் குழந்தைகள். இங்கு நிம்மதியான தூக்கம் இல்லை என்றும் குளிரும் நுளம்புமாக இரவுகள் கழிவதாக அந்தக் குழந்தைகள் குறிப்பிட்டார்கள். இதைவிட புத்தளத்திலேயே இருந்திருக்கலாம் என்று சிறுவன் அஸ்லாம் குறிப்பிட்டான். சில சிறுவர்கள் சிதைவடைந்த பாடசாலையின் படிக்கட்டுக்களில் ஏறி விளையாடிக் கொண்டிருககிறார்கள். சில சிறுவர்கள் தங்கள் தாய் தந்தையர் வாழ்ந்த இடங்கள் உருக்குலைந்ததை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
கிணறுகள் அசுத்தமடைந்தும் மூடுண்டும் கிடக்கின்றன. மலசல அறைகள் அழிந்து விட்டன. குடிநீருக்கும் மலசலங்கள் கழிப்பதற்கும் மிகவும் சிரமங்களை எதிர்கொள்வதாக சில பெண்கள் குறிப்பிட்டார்கள். ஏன் எங்களை கவனிக்காமல் இந்த அரச அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவி;லை என்றும் அவர்கள் மிகவும் ஆதங்கப்படுகிறார்கள். முதலில் குடும்பத்தலைவர்களை வந்து மீள் குடியமரச் சொன்னார்கள் பின்னர் குடும்பத்தில் உள்ளவர்களையும் வரச் சொன்னார்கள். எல்லோரும் வந்தும் ஒன்றும் ஆகவில்லை என்றும் இப்படியே நாட்கள் கழிகின்றன என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நடைபிணங்கள் போல திரிகிறோம் என்கிறார் முகமட் ரசீன். இரவில் பள்ளியில் தூங்குகிறோம். எழுந்து கடைகளில் சாப்பிடுகிறோம். இடையில் காலில் வருத்தத்துடன் நடந்து நடந்து நடை பிணங்கள் போல திரிந்தபடி வாழ்கிறோம் என்றும் கடந்த இரண்டு மாதங்களாக அப்படித்தான் வாழ்க்கை கழிகிறது என்றும் முகமட் ரசீன் குறிப்பிட்டார். நுளம்பிலும் குளிரிலும் கிடந்து வாழ்வதை எப்படி தாங்குவது? என்று அவர் கேள்வி எழுப்பினார். அரச அதிகாரிகள் எங்கள் விடயத்தில் கருணை காட்டுகிறார்களில்லை என்று மிக வருத்தத்துடன் குறிப்பிட்டார் ரசீன். அவர் தனது வீடு முதல் தனது கிணறு வரை எல்லாம் உருக்குலைந்து போயிருப்பதை காட்டுகிறார்.
தொண்ணூற்று ஐந்தில் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் வரை தங்கள் வீடுகள் பாதுகாப்பட்டது என்றும் அவற்றை இராணுவத்தினர் கைபற்றிய பின்னரே சிதைக்கப்பட்டது என்றும் சொல்கிறார் அபூபக்கர் ஜனூன். விடுதலைப் புலிகள் காலத்தில் யாரும் இந்தப் பகுதிக்குள் உள் நுழையவோ வீடுகள் கட்டிடங்களை உடைக்கவோ அனுமதிக்கபடவில்லை தெருக்கள் மூடி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன என்றும் அபூபக்கர் ஜனூன் குறிப்பிடுகிறார். 2002 சமதான காலத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் முஸ்லீம் மக்களை அழைத்த பொழுது சில மக்கள் வந்து குடியேறினர்கள் என்றும் தாங்கள் மீண்டும் யுத்தம் வெடிக்கும் என்று அஞ்சியதால் மீளவும் குடியேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கள மக்களை அத்துமீறிக் குடியேற்றுவதில் அரசாங்கமும் அதிகாரிகளும் காட்டும் ஆர்வம் தமிழ் பேசும் மக்களை சொந்த இடங்களில் குடியேற்றுவதில் காட்டுவதில்லை. நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறி ஆக்கிரமிப்பை ஆழமாக நாட்டுவதில் அரசாங்க நிகழ்ச்சி நிரல் தெளிவாக விரைவாக செயற்படுகிறது. தமிழ் பேசும் மக்களின் இருப்பை அடையாளத்தை எப்படி இல்லாமல் செய்யலாம் என்பதில் அரசின் திட்டங்களும் சூழ்ச்சிகளும் கடுமையாக ஊடுருவி படர்ந்திருக்கிறது. முதலில் தற்காலிகமான தங்குமிடங்கள், குநீர், உணவு போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உருக்குலைந்த கட்டிடங்களில் தங்கியிருக்கும் இந்த மக்களுக்குரிய உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக