Loading

வியாழன், 9 டிசம்பர், 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 4


எந்த ஒரு நாட்டுக்கும் மிக முக்கியமான, பிரதான, தலையாய, உயிர்நாடியான இப்படி பலவகையிலும் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயம் அதன் பாதுகாப்புத் துறை. அவற்றின் ஆவணங்களை அப்படியே விருந்து வைப்பதென்பது கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் தெளித்து விளையாடுவதை போல கிளுகிளுப்பானது. அதிலும் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை உலகிலேயே சக்திவாய்ந்தது மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் மிக முன்னோடி என்று பலராலும் வாய்பிளந்து பார்க்கப்படும் ஒரு துறை. அமெரிக்காவிற்கு இது மானப் பிரச்சினை என்பதால் தன் முழுவேகத்துடன் விக்கிலீக்ஸ் நோக்கிப் பாய்ந்தது. இதே போன்ற வெளியீடுகளுக்கு இந்தியா போன்ற நாடுகள் ஆளாகியிருந்தால் 'நீ என்னத்த பெரிசா பண்ணிட்ட, போன வருசம் அவன் எப்படி அடிச்சான் தெரியுமா, போன வாரம் கூட எத்தன பேரு.. ' என்று கமுக்கமாகிப் போயிருக்கும் என்பதற்கு சில தினங்களுக்கு முன் இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் இந்திய சி.பி.ஐ இணையத்தளம் பாகிஸ்தான் பங்காளிகளால் ஹேக் செய்யப்பட்டது ஒரு உதாரணம்.



ஜூலியனுக்குத் தான் செய்யப் போகும் காரியத்தின் வீரியம் நன்கு புரிந்தே இருந்தது. அமெரிக்காவிற்கு எதிரான தனது ஆப்கான் போர்க் குறிப்பு வெளியீடுகளுக்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை விக்கிலீக்ஸ் தளத்தின் பலத்தை, சட்டரீதியானப் பாதுகாப்பினைப் பரிசோதித்து உறுதி செய்து கொண்டே களமிறங்கினார். கேக் சாப்பிடும் போது சுற்றிலும் கடித்து சாப்பிட்டு விட்டு பின்பு கடைசியாக நடுவிலுள்ள செர்ரிப் பழத்திற்கு பாய்வதைப் போல, ஜூலியன் தேர்ந்தெடுத்த நாடுகள் சோமாலியா, கென்யா, ஸ்விஸ், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா அமெரிக்காவின் தேவாலயக் குழுமம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சாரா பாலின் ;) தொடங்கி அமெரிக்காவின் ஈராக் இராணுவ நடவடிக்கைகள் வரை ஒத்திகை பார்த்து விட்டே ஆப்கன் போர்க் குறிப்புகள் வெளியிடப்பட்டன.


ஜூலியனின் வாழ்க்கை குறித்துக் கேள்விப் படும் போது தொழில்நுட்ப கில்லாடியே, அசகாய சூரனே, உலகத்தையே அதிர வைக்கும் இணைய இடியே, உண்மையின் உறைவிடமே என்று வைரமுத்து, வாலி வகைக் கவிதைகள் எழுதத் தோன்றினாலும் ஜூலியனின் வாழ்க்கை மிக கடினமானது, மன அழுத்தம் நிறைந்தது. ஜூலியனுக்கென்று சொந்த வாழ்க்கை ஏதுமில்லை. எந்த விமான நிலையத்தையும் ஒரு சாதாரணப் பயணியாகக் கடந்ததில்லை, ஒவ்வொரு முறையும் பலமணி நேரச் சோதனையும், அவரது மடிக்கணினி முழுதும் பிரதியெடுக்கப்படுதலையும் தவிர்க்க முடிந்ததில்லை. ஜூலியன் சாதரணமாக தொலைபேசியில் பேசுவது கூட மிக மெல்லிய குரலில், சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று எச்சரிக்கையுடன் பேசுவது போல மிகுந்த இடைவெளி விட்டு, மிகக் குறைந்த வார்த்தைகளைப் பய்னபடுத்தியே பேசுவது வழக்கம். இது வரை யாருமே ஜூலியனை, ஒருமுறைத் தொடர்பு கொண்ட எண்ணில் மறுமுறை தொடர்பு கொண்டதில்லை. எவற்றையெல்லாம் மாற்றாவிட்டால், மாட்டிக் கொள்வோம் என்பது ஜூலியனுக்கு அத்துப்படி.


முதல் பரிட்சார்த்த முயற்சியாக சோமாலியாவின் இஸ்லாமியத் தலைவர் ஒருவர், தனது அரசியல் எதிரிகளை களையெடுப்பதற்கு நம்பிக்கையான விவசாயக் கூலிகள் வேண்டி எழுதியக் கடிதம் வெளியிடப்பட்ட போது அது உண்மையா, பொய்யா என்ற விவாதமே மேலோங்கி நின்றது. சோமலியாவின் பதிலோ, மெளனம் சம்மதம் :). இதுவே பின்னாட்களில் தனது வெளியீடுகளோடு பெரிய பத்திரிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கான காரணம். ஊழலில் நமக்கே சவால் விடும் அளவுக்கு முன்னோடியான கென்ய அரசாங்கத்தின் ஊழல் தகவல்களை அம்பலப்படுத்துவதற்காக கென்யாவின், நைரோபியில் வாசம் செய்து கொண்டிருந்த ஜூலியன் ஒரு அதிரடியான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிட்டது. ஊழல் ஆவணங்கள் வெளியிடப்பட்ட மிகச்சரியாக ஒருவாரத்தில் ஜூலியன் தங்கியிருந்த ஒரு ரகசிய வீட்டில், நள்ளிரவு நேரத்தில் ஆறு பேர் கொண்ட ஆயுதக் குழு ஒன்று தீபாவளி கொண்டாட முயற்சி செய்த போது, கென்யாவின் தரத்தை எடைபோட்டு ஜூலியனின் பாதுகாப்புக்காக முன்பே ஏற்பாடு செய்திருந்த ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் துரத்தி விட்டனர். அன்றிரவுக்குப் பிறகு யாரும் ஜூலியனைக் கென்யாவில் பார்க்கவில்லை.

அடுத்து ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற வங்கிகளின் முறைகேடுகள், முறையற்ற நிதி கையாடல்கள் ஆகியவை வெளியிடப்பட்டன. ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் குய்யோ, முறையோவென தங்கள் வேட்டியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கூப்பாடு போட்டன. ஸ்விஸ் வங்கி அமெரிக்காவிலுள்ள கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து விக்கிலீக்ஸ் தளத்தின் அமெரிக்க வழங்கிகளைச் செயலிழக்கச் செய்தது. ஒரு தளத்திற்கு வழங்கியென்பது ஒரே நேரத்தில் எத்தனை வேண்டுமானாலும் மாற்று ஏற்பாடாக செய்து வைக்கலாம். உலகமெங்கும் இணைய வல்லுநர்களை ஆரவலர்களாகக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் தளத்திற்கு கண்ணசைவில் அடுத்தடுத்த வழங்கிகள் தயாரான நிலையிலிருக்குமென்பதால் ஜூலியன் இதையெல்லாம் சட்டைச் செய்யவில்லை. இணையக் கோப்புகள் வழங்கிகள்(file servers), இணைய முகவரி வழங்கிகள்(dns servers) குறித்தும், அவை செயல்படுவிதம் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் இங்கே செல்லவும் :).

இப்படி அமைதியாக, மிகப் பொறுமையாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த ஜூலியனையும் சீண்டிப் பார்த்து, சீற வைத்த சம்பவங்களும் நடந்தது.





அடிப்படையில் ஜூலியன் மிக அமைதியான நபர். எந்தவொரு அலட்டலோ, மேதாவித்தனமோ இல்லாமல் மென்மையாகப் பேசிப் பழகும் ஜூலியனுக்கு, விக்கிலீக்ஸ் மட்டுமே உயிர்நாடி. அதற்கென்று பாதிப்பு வரும்பொழுது மனிதர் புயலென சீறுவதில் நொடிப்பொழுதும் தயங்குவதில்லை. ஊடக சுதந்திரத்திற்குப் பெயர் போன ஆஸ்திரேலியா, தங்கள் நாட்டில் சில இணையத் தளங்களைத் தடை செய்யப் போவதாகச் செய்த அறிவிப்பு, மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. ஊரெல்லாம் துயர்துடைக்கும் மண்ணின் மைந்தன், தன் வீட்டில் விசேஷம் என்றால் சும்மா இருக்க முடியுமா?. அடுத்த சில நாட்களில் ஆஸ்திரெலியாவின் ஊடகச் சுதந்திரக் கோவணம் காற்றில் பறக்க விடப்பட்டது, எந்தெந்த இணையத் தளங்கள் தடைசெய்யப்படப் போகின்றன என்ற பட்டியல் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. அவற்றுள் சிறார் -பாலியல் சம்பந்தப்பட்ட தளங்கள், மற்ற சட்ட விரோத தளங்களோடு, சில நல்ல தளங்களும் இருந்தது. ஊடகங்களின் கேள்விக் கணைகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தைத் துளைத்தெடுத்தன. முதலில் அப்பட்டியலை மறுத்த ஆஸ்திரேலியா, பின்னர் ஒருவாறாக ஒப்புக் கொண்டது.

ஆஸ்திரெலியாவுக்கு கொடுத்த அல்வாவின் விளைவு ஜெர்மனியில் விளைந்தது. இச்சம்பவம் நடந்த சில வாரங்களில், விக்கிலீக்ஸ் தளத்தின் ஜெர்மனி இணைய முகவரியின்(www.wikileaks.de) உரிமையாளரும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆர்வலருமான தியோடர் என்ற ஜெர்மானிய இளைஞரின் வீட்டில் அதிரடிச் சோதனை நடந்தது. விஷயம் கேள்விப் பட்டது ஜூலியன் சுருக்கமாக, காட்டமாக ஊடகங்களின் மூலம் ஒரு அறிக்கை விடுத்தார். அது அறிக்கை என்பதை விட எச்சரிக்கை என்பதே பொருத்தமானது. ஒரு நிறுவனத்தின் சார்பில் என்றாலும், ஒரு தனிப்பட்ட மனிதன், வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கெதிராக விடுத்த அறைகூவலாகவும், ஊடகவியலாளார்கள் பெருமை கொள்ளும் விதமாகவும் அந்த அறிக்கை அமைந்தது. "நீங்கள் எங்கள் நபர்களைத் தொடருங்கள், நாங்கள் உங்களைத் தொடர்வோம்", இது தான் அந்த அறிக்கையின் கடைசி வரிகள்.


ஜூலியனிடம் மோதினால் என்ன நடக்கும் என்று தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்களான ஜெர்மனியர்களின் அரசாங்கத்திற்குப் புரிந்தே இருந்தது. அதற்குப்பின் விக்கிலீக்ஸ் சம்பந்தமாக ஜெர்மனி எதிலும் அலட்டிக்கொள்ளவில்லை. இப்படியாக பலநாடுகளிடம் சோதனை அனுபவம் பெற்ற ஜூலியன், அமெரிக்காவின் பக்கம் திரும்பினார். அன்று பார்வையைத் திருப்பியவர் தான், இன்று குரல்வளைப் பிடி, பிடித்துக் கொண்டிருக்கும் வரை தொடர்கிறது. அமெரிக்காவில் ஜூலியனிடம் முதலில் சிக்கியது ஒரு தேவாலயக் குழுமம் (church of scientology). கிட்டத்தட்ட நம்மூர் சித்துவேலை பகவான்களின் ஆசிரமக் குழுமங்கள் மாதிரி, சுமார் 60 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. அதில் நடக்கும் உள்ளடி வேலைகள், முறைகேடுகள், சில போதைப் பொருட்கள் கையாடல் சம்பந்தமாக என்று நீள்கிறது ஆவண விவரங்கள். அனைத்தும் ஒருநாள் அதிகாலை பனிப்பொழுதில் விக்கிலீக்ஸ் தளத்தில் மங்களம் பாடப்பட்டது.


அடுத்த சில தினங்களில் தேவாலயக் குழுமத்தின் தலைமை, தங்களது வழக்கறிஞர்கள் மூலம் ஒரு கடிதம் அனுப்பியது. 'பேரன்பும் மதிப்பிற்கும் உரிய விக்கிலீக்ஸ் சமூகத்தாருக்கு, அனேக நமஸ்காரங்கள். தாங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அமெரிக்க காப்புரிமைச் சட்டத்தின் படி எங்கள் குழுமத்திற்குச் சொந்தமானவை. அவற்றை நீங்கள் பயன்படுத்துவது கிரிமினல் குற்றம். நீங்களாக நீக்கினால் உத்தமம். இல்லையேல்...' என்ற கோணத்தில் சென்றது அக்கடிதம். சும்மாவே ஆட்டம் காட்டும் ஜூலியனுக்கு, இதைப் படித்ததும் கேட்கவா வேண்டும். "உங்கள் கடிதம் ஊடக சுதந்திரத்திற்கு நீங்கள் விடுக்கும் நேரடியான மிரட்டல். உங்களின் இந்த மிரட்டலுக்கு எங்களின் பதிலாக உங்கள் தேவாலயம் சம்பந்தப்பட்ட இன்னும் சில ஆயிரம் ஆவணங்கள் வெளியிடப்படும்" என்று பதிலறிக்கை விடப்பட்டது. அத்தொடு நில்லாமல் அடுத்த வாரமே, ஆவணங்கள் விக்கிலீக்ஸ் தளத்தில் சொன்னபடி வெளியிடப்பட்டது. 'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' என்பதை உலகுக்கும் சொல்லாமல் உணர்த்தினார் ஜூலியன். அதன் பிறகு அத்தேவாலயக் குழுமம் வாயேத் திறக்கவில்லை :).


இது வரை நிறுவனங்களையும், அரசாங்கத் துறைகளையும் சோதித்துப் பார்த்த ஜூலியனுக்கு அடுத்ததாக அமெரிக்காவின் தனிநபர் குறித்த சட்டப்பாதுகாப்பினைப் பரிட்சித்துப் பார்க்க சிக்கியவர் தான் அலாஸ்கா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் சாரா பாலின். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபருக்கான வேட்பாளர். அழகுக்கும் "அறிவு"க்கும் பெயர் போனவர். இவரின் 'புத்தி'சாலித்தனமான பேட்டிகளும், அறிக்கைகளும் அமெரிக்காவில் மிகப்பிரசித்தம் :D. சில பேர் முகத்தைப் பார்த்தாலே எப்படியும் கடன் தந்து விடுவார் என்று கணிப்பவர்கள் இருக்கும் இக்காலத்தில், சாராவைப் பார்த்ததும் என்ன நினைத்தார்களோ, அவரின் யாஹூ மின்னஞ்சல் முகவரி, விக்கிலீக்ஸ் புண்ணியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஒரு மாகாணத்தின் கவர்னரின், அதுவும் ஒரு பெண்ணின் மின்னஞ்சலில் என்னென்ன வில்லங்கங்கள் இருந்தன?

சாரா பாலின், அலாஸ்காவின் அழகுப் புயல், மாகாண அழகிப் போட்டியில் மூன்றாமிடத்தில் வந்தவர். படிக்கும் அன்பர்கள் படத்தைப் பார்த்து அவசரப்பட்டு விடாமல் இருக்க 1964ஆம் ஆண்டு பிறந்தவர் என்று ஜொள்ளிக் கொள்ளப்படுகிறது :). அழகும், அரசியல் ஆசையும் சாரா பாலினை சின்னத்திரை நட்சத்திரமாக, மேயராக, மாகாண கவர்னராக இறுதியில் துணை ஜனாதிபாதி வேட்பாளர் வரை கொண்டு சென்றது.


சாரா பாலினின் யாஹூ மின்னஞ்சலை கையகப்படுத்துவதற்கு எந்தத் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவில்லை. நேராக யாஹூ தளத்திற்குச் சென்று சாராவின் மின்னஞ்சல் முகவரிக்கு கடவுச்சொல் மறந்து விட்டது என்று சொல்லப்பட்டது. நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் யாஹூவின் நிரல்கள் வழக்கம் போல் மின்னஞ்சல் கணக்கின் ரகசியக் கேள்விகளைக் கேட்டன?. சாரா பாலின் 11-02-1964ல் பிறந்தவர் என்பதும், அவரது வீட்டு முகவரியின் அஞ்சல் எண்ணும், உயர்நிலைப்பள்ளியில் தன் கூடப்படித்த நண்பரையே திருமணம் செய்து கொண்டவரென்பதும் அலாஸ்காவின் அத்தனை பேருக்கும் அத்துப்படி. ஆனால் அவைகள் தான் மின்னஞ்சல் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு யாஹூவின் நிரல் கேட்ட கேள்விகள். வந்த வேலை கொஞ்சம் சிரமமில்லாமல் முடிக்கப்பட்டது.





அடுத்த சில நாட்களில் விக்கிலீக்ஸ் தளத்தில் முக்கிய மின்னஞ்சல்கள், மின்னஞ்சல் பக்கங்களின் திரைக்காட்சிகள் சந்தி சிரித்தன (மேலே உள்ள படங்களைக் க்ளிக் செய்து பெரிது படுத்திப் பார்க்கவும்). அலாஸ்கா மாகாணத்தின் சட்டப்படி அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் அலுவல் ரீதியான தொடர்பாடல்களுக்குத் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் சாரா அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தார். அவை மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. அதைத் தவிர வேறெதுவும் கிளுகிளுப்பான சமாச்சாரங்கள் இல்லையா அல்லது இருந்தும் வெளியிடப்படவில்லையா என்பதெல்லாம் ஜுலியனுக்கே வெளிச்சம். ஜூலியனின் நோக்கமெல்லாம் அரசுத் துறைகளில் திரைமறைவில் இருக்கும் அவலங்களை வெளிச்சம் போடுவதிலேயே இருந்ததாலும் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.


உடைக்கப்பட்டது சாரா பாலினின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியென்றாலும், அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர். பத்திரிக்கையாளர்களை அழைத்துக் குமுறி விட்டார், குமுறி. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் ஜூலியனின் வெளியீடுகள் நடக்கும் போதெல்லாம் முதல் ஆவேசக் குரல் அலாஸ்காவிலிருந்து அக்காவின் குரல் தான். உச்சகட்டமாக மிகச் சமீபத்தில் "ஜூலியனைச் சுட்டுத் தள்ள வேண்டும்", "ஒரு தனிமனிதனை கட்டுப்படுத்த முடியாத ஆண்மையற்ற அரசாங்கம் ஆட்சியிலிருக்கிறது" என்றெல்லாம் சாம்பிராணி போட்டு புகைச்சலை அதிமாக்கி இன்று ஜூலியன் மீது நடந்து கொண்டிருக்கும் அப்பட்டமான அதிகாரவர்க்க வன்முறைகளுக்கு சாரா பாலினும், அவர் சார்ந்த குடியரசுக் கட்சியும் ஒரு காரணம்.


அமெரிக்க அரசாங்கம் சாரா பாலின் குறித்து கொஞ்சமும் சட்டை செய்யாமல் இருந்தாலும், உள்ளுக்குள் உதறல் இருந்தது உண்மை. காரணம் ஊரெல்லாம் வளைய வரும் ஜூலியன், நாளை நம் மடியில் கை வைத்தால் என்ன செய்வது என்ற கவலைப் பட்டு தாடி வளர்த்துக் கொண்டிருந்தனர். கவலைப்படுவதோடு நின்று கொள்ளாமல் ஜூலியனை முழுமையாக சி.ஐ.ஏ உளவாளிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது. சுற்றிலும் நடப்பது குறித்து ஜூலியன் உணர்ந்தே இருந்தார். இது வரை ஜூலியன் நடத்திய அனைத்துப் பரிசோதனை முயற்சிகளுமே வெற்றியே. சட்ட ரீதியாக யாரும் அவரது சட்டையைக் கூடத் தொட முடியவில்லை. எல்லாம் சரியாக இருக்கிறதென்றாலும் மனதுக்குள் ஜூலியனுக்கு ஒரு கவலை. காரணம், ஒவ்வொரு வெளியீட்டிற்குப் பிறகும் "இதெல்லாம் எப்ப்டிண்ணே உங்களுக்கு மட்டும் சிக்குது" எனக் கேட்கும் போதெல்லாம், "அது ராமசாமி கொடுத்தது.... இது கந்தசாமி கொடுத்தது..." என்பதே வழக்கம்.


ஜூலியனின் சுழியை அறிந்தவர்கள் யாரும் அதனை நம்புவதற்குத் தயாரில்லை. ஜூலியன் தனது ஹேக்கிங் நடவடிக்கைகள் மூலமே இதெல்லாம் வெளியில் கொண்டுவருகின்றார். அதனிலிருந்து சட்ட ரீதியாகத் தன்னைப் பாதுகாக்கி 'விக்கி' எனும் இணையச் சித்தாந்தத்தினைக் கேடயமாக்குகிறார் என்றெல்லாம் குரலெழுப்பித் தங்கள் முகமும் ஊடகங்களில் வருமாறு பார்த்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் ஜூலியனும் சி.ஐ.ஏவும் பங்காளிகள், தங்களின் எதிரிகள் மீது திட்டமிட்டுத் தாக்குவதற்கு ஜூலியனைப் பகடைக்காயாக்குகிறது, அமெரிக்காவின் உளவுத்துறை என்று கூறி அமெரிக்காவின் சுப்பிரமணியசாமியாகினர்.இதற்கெல்லாம் ஜூலியனுக்குப் பதிலளிக்க நேரமில்லை. தனதுக் கடைசி விஷப்பரிட்சையாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையோடு லேசாக உரசிப் பார்த்து விட்டு, பின்பு முழுத் தாக்குதலையும் தொடங்கலாம் என்பது தான் அடுத்தகட்ட நகர்வு.

அத்திட்டம் ஜூலியன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒருசேரப் புறந்தள்ளியதுடன், அப்போது வெளிவந்த ஆவணம் உலகையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இம்முறை தான் தங்கியிருந்து செயல்பட ஜூலியன் தேர்ந்தெடுத்த நாடு ஐஸ்லாந்து, முதல்முறையாக கூடவே இருந்து நடப்பதையெல்லாம் கண்டுகளிக்கப் பார்வையாளராக அமெரிக்காவின் நியூயார்க்கர் பத்திரிக்கையின் பத்திரிக்கையாளர் நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். அப்பத்திரிக்கையாளரின் ஜூலியனுடான ஐஸ்லாந்து அனுபவங்கள் கட்டுரையாக வெளிவந்து மிகப்பெரியத் தாக்கத்தை உண்டு பண்ணியது, ஜூலியன் எதிர்பார்த்தது போலவே 


"தணிக்கை செய்வதென்பது, பயத்தின் வெளிப்பாடு" - ஜூலியன்.


         
                                                                                               நன்றி


                                                                                                 சுடுதண்ணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக