Loading

புதன், 8 டிசம்பர், 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 3

Tor - The Onion Routing project என்று ஒரு விஷயம் இருக்கிறது. அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம். முதலில் Torக்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கும் என்ன தொடர்பு?, தங்கள் தளத்திற்கு ரகசியத் தகவல்களை அனுப்ப விரும்பும் அன்பர்கள் இணையத்தொடர்பில் தங்கள் அடையாளங்களை மறைத்து, தகவல்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க MediawikiFreenet மற்றும் PGPஆகியவற்றினைப் பரிந்துரைத்தாலும், விக்கிலீக்ஸ் தளம் தனது பங்களிப்பாளர்களுச் செய்யும் சிறப்பு சிபாரிசு தான் இந்த Tor. சரி இவையெல்லாம் என்ன? உங்களை, உங்கள் இணையத் தொடர்பு குறித்தத் தகவல்களை இணையத்தில் மறைப்பதற்குப் பயன்படும் மென்பொருட்கள். இதைப் படிக்கும் உஷாரான அன்பர்கள் 'இத வச்சுத் தமிழ்மணத்தில் கள்ள ஓட்டுப் போடலாமண்ணே?' என்றெல்லாம் கேட்கக் கூடாது :D ;).


முதலில் இணையத் தொடர்பு மின்னஞ்சல், மின்னரட்டை, கோப்புப் பகிர்தல் இப்படி எதுவாக இருந்தாலும் உங்கள் இருப்பிடத் தகவல்கள் முதல் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள் வரை விருந்து வைக்கப்படுமென்பதை சுடுதண்ணியை ஆதி முதல் படித்து வரும் அன்பர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும், தெரியாதவர்கள் இங்கே சென்று சற்று இளைப்பாறி விட்டுத் தொடரலாம். இணையத்தொடர்பில் நீங்கள் பயன்படுத்தும் வழங்கிகளில் உங்கள் தொடர்பின் சரித்திரமே சேகரிக்கப்படும். அதன் மூலம் தான் இணையக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சாத்தியமாகிறது. சமீபத்தில் தனது வழங்கியின் தகவல்களைப் பகிர மறுத்த ப்ளாக்பெர்ரி நிறுவனத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தது நினைவிருக்கலாம். விக்கிலீக்ஸ் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே இந்த இணையத் தொடர்புச் சங்கிலியை எப்படியும் கண்டுபிடித்து விட முடியும் என்பது தான். இதன் காரணமாக ரகசியத் தகவல்கள் அடங்கியக் கோப்புகளைப் பகிர்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தினால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்பதை ஹேக்கிங்கில் கரை கண்ட ஜூலியனுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவற்றுள் ஜூலியனின் தேர்வு தான் Tor.

Tor - The Onion Route தன் பெயருக்கேற்றால் போல் வெங்காயம் தான். உரிக்க, உரிக்க இதழ்கள் தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த Tor. முதலில் Tor ஒரு திறந்த கட்டற்ற மூலப்பொருள் (open source) என்று சொன்னால் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால், நமக்குப் புரியும் வண்ணம் 'இலவச மென்பொருள்' என்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது :).


Tor வலையமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு முதலில் அதன் மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும் ( உரல்:http://www.torproject.org/download/download.html.en ). உங்களைப் போன்றே இணைய உலகில் அடையாளமின்றி உலவ விரும்பும் அன்பர்களும் தங்கள் கணினியில் நிறுவியிருப்பார்கள். உலகில் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ரொம்ப நல்லவர்கள் இந்த Tor மென்பொருளில் இருக்கும் 'Relay' என்றொரு வசதியை தேர்வு செய்திருப்பார்கள். இதன் மூலம் Tor வலையமைப்பில் அவர்களின் கணினியும் ஒரு தொடர்பு வழங்கியாக செயல்படும். Tor மென்பொருளை சரியான உள்ளீடுகளுடன் செயல்படுத்தினால் Tor-relay தொடர்பு புள்ளிகளின் வழியாக மட்டுமே உங்கள் இணையத் தொடர்புகள் நடைபெறும். ஒரு தொடர்புக்குக் குறைந்த பட்சம் மூன்று தொடர்பு வழங்கிகளை Tor பயன்படுத்தும். உங்கள் தொடர்பு வலையமைப்பினை நீங்கள் விரும்பும் நேரம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைக்கப்படும் Tor வலையமைப்பில் ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் உங்கள் தகவல்கள் ஒருமுறை சங்கேதக் குறியீடுகளாக மாற்றியமைக்கப்படும். இப்படி பல அடுக்கு குறியீட்டும் முறைகள் பயன்படுத்தப்படுவதால், என்ன தகவல் பயணிக்கிறதென்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு விக்கிலீக்ஸ் இதனைப் பயன்படுத்தச் சொல்வதே சான்று. அதிகபட்சம் இந்த வலைச்சங்கிலித் தொடர்பினை ஆய்வு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் வலையமைப்பு எண் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே ஒழிய, குறிப்பிட்டத் தகவலை நீங்கள் தான் அனுப்பியதாக நிரூபிக்க வாய்ப்பே இல்லை. Tor குறித்த செயல்முறை விளக்கப் பதிவு நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மேலும் Tor சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அதனைப் பயன்படுத்துவதாலேயே அல்லது relay செய்யும் தொடர்புப் புள்ளியாக இருப்பதாலேயோ உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் ஒரு முக்கிய அம்சம்.

இப்படி மசாலாப் படத்தின் கதாநாயகனைப் போல் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்படும் Tor வலையமைப்பில் கொக்கி போடப்பட்டுத் தான் முதல் விக்கிலீக்ஸ் ரகசியத் தொகுப்பு வெளியிடப்பட்டது!!!. இருந்தும் விக்கிலீக்ஸ் ஏன் இன்னும் Tor வலையமைப்பினைப் பரிந்துரைக்கிறது. 
ஜூலியனுடன் கைகோர்த்த நண்பர்களில் ஒருவர் இந்த Tor வலையமைப்பில் relay எனப்படும் தொடர்புப்புள்ளியாக இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த ஜூலியன் யதார்த்தமாக அதன் வலைப்போக்குவரத்தை உளவு பார்க்க, அதில் பதார்த்தமாக நிறைய சீன வலையமைப்பு எண்கள் தொடர்பிலிருப்பது தெரிய வந்தது. கடுமையான இணையக் கட்டுப்பாடு கொண்ட சீனாவில் இருந்து Tor வலையமைப்பினை உபயோகிப்பது நிச்சயம் வில்லங்கமான நபர்கள் தான் என்று முடிவு செய்யப்பட்டு கொக்கிகள் அமைக்கப்பட்டு அந்த நண்பரின் relay தொடர்பின் முழுப் போக்குவரத்தும் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் அந்த வலைப் போக்குவரத்தின் சொந்தக்காரர்கள் சீன ஹேக்கர்கள். கடந்த காலங்களில் சீன மொழியில் பின்னூட்டங்கள் பெற்று, அது என்ன ஏதென்று புரிந்து கொள்வதற்குள் மொத்தமாக இழுத்து மூடப்பட்ட வலைப்பதிவுகள் ஏராளம் என்பது உபதகவல். திரைப்படங்களில் அதுவரை சாதரணமாகக் காட்டப்படும் கதாநாயகன், வில்லனின் அடியாட்கள் வரும் காட்சியில் திடீரென கராத்தே சாம்பியன் என ஒரு அவசரக் கதம்பம் மொத்தமாக சுற்றப்படுவதைக் கண்டுகளித்திருப்பீர்கள். கிட்டத்தட்ட அதே போல் ஒரு தருணம் தான் ஜூலியனுடன் இணைந்திருந்தவர்களுக்கு.



ரோஜா படத்தில் வரும் அரவிந்த்சாமியைப் போல் ஜூலியனும் சங்கேதக் குறியீட்டு முறை வித்வான் என்று அப்போது தான் அவர்களுக்குத் தெரிந்தது, மேலும் Tor வலையமைப்பிற்கான் மென்பொருள் கட்டமைப்பிற்கான மென்பொருளில் சில தொழில்நுட்ப பள்ளங்கள் இருந்ததும் காரணம். தேர்ந்த வித்வானாகிய ஜூலியன் அந்த பள்ளங்களில்லாம் நீக்கமற நிறைந்தார். சில வாரங்களில் சுமார் 1.2 மில்லியன் கோப்புகள் கைப்பற்றப்பட்டன. அவ்வளவும் புதையல். அதில் மொத்தமாக என்னெவெல்லாம் சிக்கியதென்பது ஜூலியனுக்கும் அவர் சகாக்களுக்கு மட்டுமே வெளிச்சம். 1.2 மில்லியன் கோப்புகள் என்பது அளவுகளில் டெராபைட்களில் இருக்குமென்பதால் மொத்தத்தையும் வலையேற்றுவதற்கு பொருளாதரம் கெட்டியாக இருக்க வேண்டும், மேலும் கொஞ்சம் கஷ்டமும் கூட. ஜூலியனுக்கு அப்படி கிடைப்பதையெல்லாம் வலையேற்றுவதில் விருப்பமில்லை. அதுவும் அமெரிக்காவிற்கு எதிரான முதல் வெளியீடு, ஒரே நாளில் உலகம் முழுதும் அத்தனை இடங்களில் தீப்பிடிக்க வேண்டுமென்பதே ஜூலியனின் கனவு.


நம்மூரில் 12 பேர் கொண்ட குழு அமைத்து ப்ளெக்ஸ் போர்டுகளுக்கு வாசகங்கள் எழுதுவது போல விக்கிலீக்ஸ் தளத்திற்கு நான்கு பேர் கொண்ட ரகசியக் குழு இருக்கிறது. அவர்கள் தான் கிடைக்கும் கோப்புகளையெல்லாம் சரிபார்த்து, மொழிபெயர்க்க வேண்டியிருந்தால் மொழிபெயர்த்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடலாமா, வேண்டாமா என்று பரிந்துரைப்பார்கள். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவைகளில் இருந்து சிறப்பானவையாக, முக்கியத் தகவல்களாக, பொய் வேஷத்தினைத் தோலுரிக்கும் கோப்புகளைத் தேர்ந்தெடுப்பது ஜூலியனின் வேலை. கிடைத்த 1.2 மில்லியன் கோப்புகளில் இவ்வாறு தேறியது சில ஆயிரங்கள் மட்டுமே. அவையனைத்தும் ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. விக்கிலீக்ஸ் தளத்தில் மட்டுமே வெளியிடாமல் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தின் முக்கியப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறுநாள் உலகமே தடுமாறிப்போனது. உண்மையில் அந்த ஆவணங்களை உஷார்ப் படுத்திக் கொண்டிருந்த சீனர்கள் " நாங்க திருடிட்டு வரும் போது, அவன் எங்ககிட்ட இருந்து பறிச்சிட்டான்' என்று சொல்ல முடியாமல் கமுக்கமாகிப் போயினர்.

வெறும் நாடகத்தன்மையான, நிருபர்களால் வடிவமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட, ஆட்சியாளர்களையோ, அரசாங்கத்தையோ கோபப்படுத்துமோ என்றெல்லாம் யோசித்தே எழுதப்பட்ட செய்திகளையே பெரும்பாலும் படித்து வந்த உலகத்துக்கும் சரி, சக ஊடகங்களுக்கும் சரி, விக்கிலீக்ஸ் தளத்தின் அட்டகாசமான ஆரம்ப கால அதிரடி வெளியீடு திக்குமுக்காட வைத்துவிட்டது. சிலர் விக்கிலீக்ஸ் குறித்து நம்புவதா, வேண்டாமா என்றும் குழம்பினார்கள். இதனை முன்கூட்டியே கணித்த ஜூலியனின் ஏற்பாடு தான் முக்கியப் பத்திரிக்கைகளில் வெளியிட வைத்த சாமர்த்தியம். அமெரிக்க அரசாங்கத்தின் "நேர்மையான' போர் தந்திரங்கள், செலவீனங்கள் ஆகியவை குறித்து அனைத்துத் தகவல்களும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமானது சக நேசநாட்டுப் படையான கனடாவின் படையணியைச் சேர்ந்த நால்வரை அமெரிக்க ராணுவமே போட்டுத் தள்ளியதும் அடக்கம். வட அமெரிக்காவில்அரசியல் உஷ்ணம் அதிகமானது.


நீச்சல் தெரியாதவனைத் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நிலைமை அமெரிக்காவிற்கு. இதற்கு முன் சரித்திரத்தில் இப்படி மொத்தமாக இவ்வளவு விஷயங்கள் ஒரே நேரத்தில் அரசாங்கக் ஆவணங்களாகவே வெளியிடும் அளவுக்கான ஊடகத் தாக்குதலை எந்த நாடும் எதிர்கொண்டதில்லை. 'இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான தாக்குதல், இல்லை இல்லை ' இவர்கள் யாரென்றே தெரியவில்லை, எப்படி நம்புவது', இல்லை இல்லை 'அவர்கள் சொல்வதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது, பின்னர் நாங்கள் திருத்திவிட்டோம், இல்லை இல்லை 'அந்த கனடா வீரர்களை நாங்கள் கொல்லவில்லை, அவர்களாகவே தோட்டாக்களின் மேல் பாய்ந்து உயிரை விட்டு விட்டார்கள்' என்றெல்லாம் உளறிக்கொட்டியது. அப்படி உளறிக் கொட்டினாலும், விக்கிலீக்ஸ் தளத்தின் ஆணிவேரை நோக்கியத் தாக்குதலிற்கான தனது சகல முயற்சிகளையும் அன்றே ஆரம்பித்தது அமெரிக்கா.

ஒருபுறம் ஏகாதிபத்தியங்கள் மூர்க்கங்கொண்டாலும், ஆதரவாளர்களும், பாராட்டுத் தெரிவிப்பவர்களும் எக்கச்சக்கமாகிப் போகினர். ஏகப்பட்ட ஆர்வலர்கள் விக்கிலீக்ஸ் மூலம் தங்களிடம் இருக்கும் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள, ஜூலியனின் தொழில்நுட்பம் மூலம் தங்கள் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் முன்வந்தார்கள்.

பாராட்டுகளும், வாழ்த்துக்களும் ஜூலியனைத் தேடித் தேடி உலகமெங்கும் பயணித்துச் சோர்ந்தன. இவற்றுக்கெல்லாம் ஜூலியனுக்கு நேரமில்லை, அடுத்தடுத்த வெளியீட்டுத் தொகுப்புகளுக்கான ரகசிய இடத்தில் உழைப்பில் ஈடுபட்டிருந்தார். விக்கிலீக்ஸ் தளத்திற்குத் தகவல்களை அனுப்பு விரும்பும் ஆர்வர்லர்களுக்கென்று சிறப்பு மாற்றங்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Tor மென்பொருள் அனுப்பி வைக்கப்பட்டது (அதற்கான் சுட்டி இப்பொழுது விக்கிலீக்ஸ் தளத்தினில் இருந்து நீக்கப்பட்டுள்ளது :D). தனது ஒவ்வொரு வெளியீடுக்கும் ஜூலியன் சந்தித்த மிரட்டல்களும், அதற்கு அவர் அளித்த பதில்களும் ஊடக வரலாற்றின் தங்கத் தருணங்கள். இவை அனைத்தையும் புறந்தள்ளி ஒரு குற்றச்சாட்டும் ஜூலியனை நோக்கி முன்வைக்கப்பட்டது, அவை அடுத்த பகுதியில்.

ஓவ்வொரு வாரமும் கூட ஒரு பெண்டகன் ஆவணத்தை எங்களால் வெளியிட முடியும் -                                                                                                 
                                                                                           
           நன்றி

                                                                                                 சுடுதண்ணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக