Loading

புதன், 6 ஜூலை, 2011

ராணுவத்துடன் அதிரடியாக மோதுகிறார் தமிழக முதல்வர்!

சென்னை, இந்தியா: “ராணுவம் எப்படி மறுத்தாலும், சென்னையில் கொல்லப்பட்ட சிறுவன்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது, நிச்சயமாக ராணுவத்துடன் சம்பந்தப்பட்ட ஒருவர்தான்” இவ்வாறு ராணுவத்தை நேரடியாகத் தாக்கியிருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா.



தமிழக முதல்வரின் இந்தக் கூற்று, தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. காரணம், முதல்வர் இப்படிக் கூறுவதற்கு சற்று முன்னர்தான் ராணுவத்தின் பிரதான தளபதி வி.கே.சிங், “இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ராணுவத்துக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று நான் உறுதிப்படுத்துகிறேன்” எனக் கூறியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் 13 வயது சிறுவன் டில்சன்மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதில் கொல்லப்பட்டான். ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி ஒன்றினுள் நடமாடியபோதே டில்சன் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கொலை தொடர்பாக தமிழ சி.ஐ.டி. டிவிஷன், மூன்று ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடாத்தியிருந்தது. அந்த மூவரில் ஒருவர், லெப்டினென்ட் கர்னல் தர நிலையிலுள்ள அதிகாரி.

ராணுவத்தின் பிரதான தளபதி வி.கே.சிங் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தக் கொலையில் ராணுவத்தினருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது தவறானது. துப்பாக்கிச் சூட்டை நடாத்தியது தனிப்பட்ட ஒரு நபர்தான் என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது. இதுபற்றிய உண்மைகளை விரைவில் அறிவிப்போம்” என்று கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, “துப்பாக்கிச் சூட்டை நடாத்தியது ராணுவத்தில் ஒருவர்தான். அவரை உடனடியாக எமது காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என ராணுவத்தின் பிரதான கட்டளை அதிகாரிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.


ராணுவம், நேரடியாக மத்திய அரசின் கன்ட்ரோலில் இருக்கும் ஒரு அமைப்பு. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது. ஒரு மாநில முதல்வர், ராணுவத்தை சேலஞ்ச் பண்ணுவது இந்திய வரலாற்றில் மிக அரிதான விஷயம்!

முதல்வரின் இந்தக் கூற்று, மத்திய அரசில் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக