கோமா நிலையில் இருந்த எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு நினைவு திரும்பியுள்ளது.
மக்கள் போராட்டத்தின் விளைவாக கடந்த பிப்ரவரி மாதம், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவியிழந்தார்.
83 வயதாகும் அவர் மீது ஊழல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் போலீஸôர் விசாரணை நடத்தியபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்குள்ள ஷர்மெல்-ஷேக் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென கோமா நிலைக்கு சென்றார். உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் திங்கள் கிழமை அவருக்கு நினைவு திரும்பியது.
அவர் நலமாக இருப்பதாகவும், கோமா நிலை மீண்டும் ஏற்படும் வாய்ப்பு இல்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக தனியார் தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை முடிந்து, ஹோஸ்னி முபாரக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக