Loading

வெள்ளி, 8 ஜூலை, 2011

84 கோடியை தொட்ட செல்போன் சேவை !!

சென்ற மே மாத நிலவரப்படி, நாட்டில் தொலைத் தொடர்பு சேவை பெற்றோர் எண்ணிக்கை 84 கோடியாக உயர்ந்துள்ளது. இது குறித்து தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (இரிடா) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்ற மே மாதம், 1.33 கோடி புதிய சந்தாதாரர்கள் மொபைல் போன் சேவையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் நாட்டில் மொபைல் போன் சேவை பெற்றோர் எண்ணிக்கை 1.3 சதவீதம் அதிகரித்து, 82.70 கோடியில் இருந்து 84 கோடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், தொலைத் தொடர்பு சேவை பெற்றோர் சதவீதம் 70.23 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற மே மாதம், அதிகளவில் மொபைல் போன் சந்தாதாரர்களை சேர்த்ததில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிறுவனம் 25 லட்சம் மொபைல் போன் சந்தாதாரர்களை சேர்த்து, மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 14.11 கோடியாக உயர்த்திக் கொண்டுள்ளது. இதே மாதத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 24 லட்சத்து 50ஆயிரம் அதிகரித்து, 16.70 கோடியாக உயர்ந்துள்ளது. வோடபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 24 லட்சத்து 40ஆயிரம் உயர்ந்து, 13.94 கோடியாக அதிகரித்துள்ளது.

ஐடியா செலுலார் மற்றும் ஏர்செல் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, முறையே 18 லட்சம் மற்றும் 11 லட்சம் உயர்ந்துள்ளது. டாட்டா (3.90 லட்சம்), பீ.எஸ். என்.எல் (8.20 லட்சம்), எம்.டி. என்.எல் (27 ஆயிரத்து 952) ஆகிய நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளன. சென்ற மே மாதம், சாதாரண தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 3.45 கோடியில் இருந்து 3.40 கோடியாக குறைந்துள்ளது. இணையதளச் சேவையை பெற்றோர் எண்ணிக்கை 0.92 சதவீதம் உயர்ந்து, 1.20 கோடியில் இருந்து 1.21 கோடியாக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக