Loading

திங்கள், 2 மே, 2011

* ஐ.நா. உடன்படிக்கையை அமல்படுத்தினால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும்: வே.வசந்திதேவி






குழந்தைகள் உரிமை குறித்து ஐ.நா. சபை ஏற்படுத்திய உடன்படிக்கையையும் நடைமுறைகளையும் அமல்படுத்தினால் மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும் என தமிழக மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் வே.வசந்திதேவி தெரிவித்தார்.

 குழந்தைகள் உழைப்பை தடை செய்தல், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமலாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குழந்தை உழைப்பு எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.



 இதில் தமிழக மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான வே.வசந்திதேவி பேசியதாவது:

 நம் மக்களாட்சியின் வயது 60-ஜ கடந்த பிறகும் கூட பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், செங்கல் சூளைகள், கல் குவாரிகள், உணவகங்கள் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் குழந்தைகள் இன்னும் தொழிலாளர்களாக உள்ளனர். இந்தியாவில் வறுமை இல்லை; வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்றாக மிளிர்கிறது எனப் பேசிக்கொண்டே இன்னொரு பக்கம் வறுமையைக் காரணமாகச் சொல்லி குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 நாகரிக சமூகத்தின் மதிப்புமிகு பிரஜையாக குழந்தைகளைக் கருத வேண்டும் என்பது ஐ.நா.வின் குழந்தைகள் உரிமையின் உடன்படிக்கை. குழந்தைக்கே முதலிடம் என்ற கோட்பாட்டை மக்களாட்சிக்கு முன்மொழிந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த உடன்படிக்கை ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் நடந்தது என்ன?

1986-ம் ஆண்டு கொண்டுவந்த குழந்தை உழைப்புச் சட்டத்தை இன்னும் அமல்படுத்திக்கொண்டே இருக்கிறோம். இதனால்தான் இன்றும் குழந்தைத் தொழிலாளர் நிலை தொடர்கிறது. இந்தச் சட்டப்படி, 1997 முதல் 2006 வரை தமிழகத்தில் தொழிலாளர் நலத்துறையால் மேற்கொள்ளப்பட்ட 12,32,050 ஆய்வுகளில் 6,122 குழந்தைத் தொழிலாளிகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 1,054 முதலாளிகள் மட்டும் அபராதம் செலுத்தியுள்ளனர்; சிறைத் தண்டனை கிடையாது. இதே நிலைமைதான் இந்தியா முழுவதும் உள்ளது.

 இதை மாற்ற குழந்தைத் தொழிலாளர் தொடர்பான சட்டங்களில் திருத்தம் வேண்டும். குழந்தைகளுக்கு நிர்ணயிக்கப்படும் 14 வயது என்பதை ஐ.நா. உடன்படிக்கையின்படி 18 வயதாக மாற்றி கட்டாயக் கல்வி, தரமான கல்வி, இலவசக் கல்வி, சமச்சீர் கல்வி ஆகியவற்றை அனைத்துக் குழந்தைகளுக்கும் அளிக்கும் வகையில் இந்தச் சட்டத்தை மாற்றினால்தான் குழந்தை உழைப்பை முற்றிலும் அகற்ற முடியும் என்றார்.

 இந்தக் கருத்தரங்கில் யுனிசெப் நிறுவனத்தின் குழந்தை உரிமைப் பாதுகாப்பு அலுவலர் வித்யாசாகர், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் மோசஸ், குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார அமைப்பின் மாநில அமைப்பாளர் பெ.ஜோசப் விக்டர் ராஜ், வடக்கு மண்டல அமைப்பாளர் க.மூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் அ.தேவநேயன், குழந்தை உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக