சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலை சமீபத்தில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. விரைவில் மேலும் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், டீசல், கெரசின் மற்றும் சமையல் காஸ் விலையையும் உயர்த்த வேண்டும் என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
தற்போது டீசல் விற்பனையில் லிட்டருக்கு 18.19 ரூபாயும், கெரசினுக்கு 29.69 ரூபாயும், சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 329.73 ரூபாய் என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அதனால், இவற்றின் விலையை உயர்த்துவது குறித்து முடிவு செய்ய, விரைவில் மத்திய அமைச்சர்கள் அடங்கிய அதிகாரக் குழுவின் கூட்டம் நடைபெறும் என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சமீபத்தில் தெரிவித்தார்.
அனேகமாக அடுத்த சில நாட்களில் இந்தக் கூட்டம் நடக்கலாம். அப்போது, டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், சமையல் காஸ் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 25 ரூபாயும் உயர்த்த வேண்டும் என்ற பெட்ரோலிய அமைச்சகத்தின் கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.மத்திய அமைச்சர்கள் அடங்கிய அதிகாரக் குழுவின் கூட்டம் இந்த வாரம் நடக்கலாம் என்பதை, மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாரும் உறுதி செய்தார்.
அமைச்சர்கள் குழுவின் கூட்டம், கடந்த 11ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதில் பவார், அழகிரி உட்பட சில மந்திரிகள் பங்கேற்க இயலவில்லை. அதனால் புதிய தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.பணவீக்க அதிகரிப்பைக் காரணம் காட்டி, டீசல் விலை உயர்வை நிறுத்தி வைப்பது அவ்வளவு சரியானதல்ல என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக