தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சராக பதவியேற்ற ஏழே தினங்களில், திருச்சி பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் மரியம் பிச்சை காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன். நாம் இறைவனிடமிருந்தே வந்தோம்!. மீண்டும் அவனிடமே மீள்வோராக இருக்கின்றோம்!.) அவருக்கு வயது 60. சென்னையில் இன்று எம்.எல்.ஏ. வாக பதவியேற்க இருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மரியம்பிச்சை திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். பி.ஏ. வரலாறு படித்துள்ளார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்தவர். திருச்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்று, அமைச்சராகவும் ஆனவர். இவருக்கு பாத்திமாகனி என்ற மனைவியும், ஆசிக் மீரா, ராஜ்முகமது, அமீர்முகமது என்ற 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை 7,007 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். நேருவை வீழ்த்தியதற்காக மரியம் பிச்சைக்கு அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. கடந்த 16ஆம் தேதி தான் அமைச்சராக மரியம் பிச்சை பதவியேற்றுக் கொண்டார்.
இவரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது தான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகபடுத்துவதாக ஜெயலலிதா கூறியது, நேருவை எதிர்த்து போட்டியிட்டது, மற்றும் திருச்சியில் முஸ்லிம் ஒருவர் போட்டியிட்டதன் விளைவாக, திருச்சியில் வாழும் முஸ்லிம் மக்கள் தொகையை தமிழக முஸ்லிம்கள் உணர்ந்தது என்று இவரும், இவரது தொகுதியும் பிரபலமாகியது குறிப்பிடத்தக்கதாகும்.
மரணமடைந்த மரியம் பிச்சை அவர்கள் தற்போதைய அமைச்சரவையில், சுமார் எட்டுகோடி மக்களின் சார்பில், முஸ்லிம்களின் பிரதிநிதியாக அங்கம் வகித்த ஒரே ஒரு அமைச்சர் ஆவார். கடந்த சட்டமன்றத்தில் முஸ்லிம் அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாக இருத்தது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள ஆறு முஸ்லிம் உறுப்பினர்களில், தற்போது ஒன்று குறைந்தது மட்டுமின்றி, அமைச்சரவையில் முஸ்லிம்களின் பங்கு பூஜ்ஜியமாக ஆகியுள்ளது. எனவே இந்த குறையை தமிழக முதலமைச்சர் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். இருக்கும் மற்ற இரண்டு முஸ்லிம் அதிமுக உறுப்பினர்களையும் அமைச்சராக்கி, திருச்சியில் மீண்டும் முஸ்லிம் ஒருவருக்கே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்பதே நம்முடைய வேண்டுகோள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக