தமிழக சட்டசபையில், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரே மேஜை தான் முன்னர் இருந்தது. இதனால், மிக அருகிலேயே இரு தரப்பினரும் பேசிக் கொள்ள வாய்ப்பு இருந்தது. இந்த வசதி, சில சமயங்களில் பிரச்னைகளுக்கும் காரணமானது. 1996 - 01ல் தி.மு.க., ஆட்சியின் போது, எதிர்க்கட்சி முன்வரிசையில் அமர்ந்திருந்த தாமரைக்கனி, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை மூக்கில் குத்தினார். அதேபோல, 1989ல் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெயலலிதா அதை தடுத்ததால், கைகலப்பு ஏற்பட்டு, ஜெயலலிதா சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்டார். இதன் பின், 2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின்னர் நடந்த முதல் கூட்டத் தொடரில், ஆளுங்கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் காரணமாக, சட்டசபையில் இருக்கை வசதிகள் மாற்றியமைக்கப்பட்டன. ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி விடப்பட்டது. எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்கள், ஆளுங்கட்சி வரிசைக்கு வர முடியாதபடி இருக்கை வசதிகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக, சட்டசபைக்குள் அனைவருக்கும் இருக்கை அளிக்க முடியாமல், வெளியே, "லாபி' வரை இருக்கைகள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியே இருந்ததால், அவர்கள் பேசும் போது, "மைக்' ஆபரேட்டர்களுக்கு தெரியாத நிலை இருந்தது. இதற்காக, அங்கு கேமராக்கள் வைக்கப்பட்டு, அதை பார்த்து, அவர்களுக்கு "மைக்' இணைப்பு கொடுக்கப்பட்டது.
இவ்வளவு மாற்றங்களுக்கு பிறகும், புதிய சட்டசபை வளாகம் அமைக்கப்பட்டது. அதனால், இங்கிருந்த சட்டசபை செயலகம் அங்கு மாற்றப்பட்டது. கோட்டையில் இருந்த சட்டசபையில், இருக்கைகள் அகற்றப்பட்டு, தரை சமமாக்கப்பட்டு, செம்மொழி நூலகமாக மாற்றப்பட்டது. தற்போது அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்தவுடன், கோட்டையில் உள்ள பழைய சட்டசபையிலேயே கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த சட்டசபையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவ்வாறு புதுப்பிக்கும் போது, 2006க்கு முன் இருந்த முறைப்படியே, இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது, ஆளுங்கட்சி வரிசைக்கும், எதிர்க்கட்சி வரிசைக்கும் இடையேயான இடைவெளி பழையபடி குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மற்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. அதே நேரத்தில், சபாநாயகர் இருக்கையை, ஏற்கனவே இருந்த இடத்துக்கு எதிர்புறத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் இருக்கை வடக்கு பார்த்து முதலில் இருந்தது. அதை மாற்றி, தெற்கு பார்த்து தற்போது வைக்கப்படுகிறது. எப்போதும், சபாநாயகருக்கு வலது கை பக்கம் தான், ஆளுங்கட்சி வரிசை இருக்கும். சபாநாயகர் இருக்கைக்கு வலது பக்கம் உள்ள ஆளுங்கட்சி வரிசையின் முதல் இருக்கையில் முதல்வருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அதன்படி, தற்போது சபாநாயகர் இருக்கை எதிர்புறத்துக்கு மாற்றப்படுவதால், ஆளுங்கட்சி வரிசையும் எதிர்புறத்துக்கு மாறுகிறது. அதாவது, முன்னர் எதிர்க்கட்சியினர் அமர்ந்திருந்த வரிசை, தற்போது ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த வரிசையில் முதல் இடம், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்படுகிறது. முந்தைய சட்டசபையில், ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு, தனிப் பெரும்பான்மை இல்லாததால், ஆளுங்கட்சி வரிசையில், பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு 150 உறுப்பினர்கள் உள்ளதால், இவர்களில், சிலருக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்படும்.
சபாநாயகர் இருக்கையின் வரலாறு: கோட்டையில் உள்ள சபாநாயகர் இருக்கை, கடந்த 1922ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி, அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெலிங்டன் மற்றும் லேடி வெலிங்டன் ஆகியோரால் பரிசாக அளிக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் அன்று காலை 11.05 மணிக்கு நிறைவேற்றப்பட்ட போது, இருவரும் கலந்து கொண்டனர். அப்போது சபை தலைவராக ராஜாஜி இருந்தார். சபாநாயகரின் இருக்கை எட்டு அடி உயரம் கொண்டது. சிறந்த தேக்கு மரத்தால் ஆனது. கலை நுணுக்கம் மிகுந்த இந்த இருக்கையில், அமரும் தலைவர் சில ரகசிய தாள்களை வைத்துக் கொள்ளவும், எழுதிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டசபை வளாகம் அமைத்தபோது, இந்த இருக்கையை அங்கு கொண்டு செல்லாமல், அதே மாதிரியான தோற்றம் கொண்ட புதிய இருக்கை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக