சீனாவின் சான்யா நகரில் நடைபெறும் `பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று சீனா சென்றார். அங்கு அவர் சீனா மற்றும் ரஷிய அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து `பிரிக்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் 3-வது உச்சி மாநாடு, சீனாவில் கடலோர நகரமான சன்யாவில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.
அதில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று டெல்லியில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்றார்.
மாநாட்டில் அவர், சீன அதிபர் ஹு ஜின்டாவோ, ரஷிய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், பிரேசில் அதிபர் டில்மா ரவுசப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜ×மா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இம்மாநாட்டை முடித்துக்கொண்டு, 15-ந் தேதி கஜகஸ்தான் நாட்டுக்கு மன்மோகன்சிங் செல்கிறார். அங்கு நடைபெறும் இந்தியா-கஜகஸ்தான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது, இரு நாடுகளிடையே அணுசக்தி ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. மன்மோகன்சிங், கஜகஸ்தான் நாட்டுக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
`பிரிக்ஸ்' மாநாட்டில், லிபியாவில் நடந்து வரும் புரட்சி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக (பொருளாதார உறவு) செயலாளர் மன்பீர்சிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க, வளைகுடா நாடுகளில் நடந்து வரும் புரட்சி குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்கப்படும். இந்த பிரச்சினைகள், எண்ணெய் வினியோகம் மற்றும் விலைவாசி விஷயத்தில் நிச்சயமற்ற நிலைமையை உருவாக்கி உள்ளன.
இவை பிரிக்ஸ் மாநாடுகளை நேரடியாக பாதிக்கக்கூடியவை என்பதால், இது மிகவும் முக்கியமான பிரச்சினை. மேலும், சர்வதேச பொருளாதார நிலைமை, பணவீக்கம் ஆகிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், மற்ற நாடுகளின் கருத்துகளை அறியவும் இந்தியா நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவுக்கு செல்லும் முன்பு, பிரதமர் மன்மோகன்சிங் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பிரிக்ஸ் அமைப்பில், புதிதாக தென் ஆப்பிரிக்கா இணைந்துள்ளது. அதை வரவேற்கிறோம். பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் ஜி-20 அமைப்பிலும், ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் இடம்பெற்றுள்ளன. எனவே, இவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். உலகின் சில நாடுகளின் சமீபத்திய நிகழ்வுகளால், நிச்சயமற்ற தன்மை உருவாகி இருப்பதால், பொருளாதார வளர்ச்சி இன்னும் சிக்கலாகவே உள்ளது.
எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரிக்ஸ் நாடுகளுடன் ஆலோசனை நடத்துவேன். இந்திய-சீன உறவு, மிக முக்கியமான உறவு. அது உலக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக