சண்டிகார்: சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங்கின் வாரிசான ஜீத் சிங் கட்டட வேலை செய்து, வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
இந்திய சுதந்திரப்போராட்டம் தீவிரமாக நடந்து வந்தபோது, 1919 ம் ஆண்டு ஏப்., 13ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில், குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, ஜெனரல் டயரின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர் உத்தம் சிங். இந்த படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து, ஜெனரல் டயர், லண்டன் திரும்பினார். சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டிருந்த உத்தம் சிங், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை பழிவாங்குவதற்காக, லண்டனுக்குச் சென்றார். ஆனால், ஏற்கனவே ஜெனரல் டயர் இறந்துவிட்டார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்தபோது, பஞ்சாப் கவர்னராக இருந்தவர் மைக்கேல் டயர். ஜெனரல் டயரின் நடவடிக்கைகளை, இவர் ஆதரித்தார். எனவே, ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு அவரும் காரணம் என்று, உத்தம் சிங் நம்பினார். எனவே, லண்டனில், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மைக்கேல் டயரை, உத்தம் சிங் சுட்டுக் கொன்றார். பின், உத்தம் சிங் கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1940ம் ஆண்டு, லண்டனிலேயே அவர் தூக்கிலிடப்பட்டார். இவரது ஒன்றுவிட்ட சகோதரரின் பேரனான ஜீத் சிங் (52), பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறிய டவுனில், வறுமையில் வாழ்ந்து வருகிறார். ஜீத் சிங்கிற்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கட்டட தொழிலாளியான அவரின் தினக் கூலி 150 ரூபாய்.
இதுகுறித்து, ஜீத் சிங் கூறுகையில், "வாழ்க்கை எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. இரண்டு மகன்களும் இன்னும் செட்டிலாகவில்லை. அவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது' என தெரிவித்தார். ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்து, கடந்த ஏப்ரல் 13 ம் தேதியுடன் 92 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனையொட்டி, உத்தம் சிங்கின் வாரிசான ஜீத் சிங்கிற்கு, டில்லியைச் சேர்ந்த சிங்நாத்-நீனா ஜா தம்பதி, நிதி திரட்டி, 11 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர். இதே போன்று, வறுமையில் வாடும் சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு நிதி திரட்டிக் கொடுக்க, அந்த தம்பதி முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக