Loading

புதன், 20 ஏப்ரல், 2011

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட்


சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தயாரிப்பில் உருவான, பதினெட்டாவது பி.எஸ். எல்.வி., ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ‌செயற்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, 10:12க்கு, பி.எஸ்.எல்.வி -சி16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. முந்தைய ராக்கெட்டுகளை விட, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக , "இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இதற்கான, ஐம்பத்து நான்கரை மணி நேர கவுன்ட் டவுண், 18ம் தேதி அதிகாலை 3.42 மணிக்கு துவங்கியது.


இஸ்ரோ சேர்மன் பேட்டி : பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டப் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : இந்த ஆண்டின் முதல் செயற்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் நல்கிய முழு ஒத்துழைப்புக்கு நிர்வாகத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



பி.எஸ்.எல்.வி., சி16 சிறப்பு : இன்று செலுத்தப்பட்ட பி.எஸ். எல்.வி., ராக்கெட், முந்தைய இதே வரிசை ராக்கெட்களில் இருந்து, பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது . பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் இதுவரை 25 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், 19 உள்நாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன. இதில், சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் - 1 செயற்கைக்கோள் குறிப்பிடத்தக்கது. இன்று விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், இந்திய தயாரிப்பில் உருவான 1,206 கிலோ எடை கொண்ட, "ரிசோர்ஸ்சாட்-2' என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், இயற்கை வளம் குறித்து அதிகம் அறிய முடியும். மேலும் சுற்றுச்சூழல் குறித்தும், இயற்கை பேரழிவுகள் தொடர்பாகவும், ஆராய முடியும். இத்துடன் 92 கிலோ எடை கொண்ட, இந்திய - ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான, "யூத்சாட்' என்ற, சிறிய ரக செயற்கைக்கோளும், சிங்கப்பூரில் உருவான 106 கிலோ எடை கொண்ட, "எக்ஸ்- சாட்' என்ற சிறிய ரக செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன. இதில், யூத்சாட் செயற்கைக்கோள் கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில், வான்வெளிக்கும், பூமி மண்டலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயும் வகையில், நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக