![]() |
அணுகுண்டு அப்துல்கலாமுக்கு முதல்வர் பதவியைத் தூக்கி வீசிய மணிவாசகனின் அன்புக் கடிதம்..
ஜாப்பான் லவ் இன் டோக்கியோ… என்பது ஒரு பழைய இந்திப் பாடல். இப்போது இப்பாடலைப் போலவே அணுக்கதிர்களை சுமந்த காற்று டோக்கியோ நோக்கி வீச ஆரம்பித்துள்ளது. கடந்த சில தினங்களாக அணுத்துகள்களை பசுப்பிக் சமுத்திரம் நோக்கி அள்ளிச் சென்ற காற்று இப்போது அதை நன்கு புடைத்து பதப்படுத்தி டோக்கியோவிற்குள் அள்ளியபடி வந்து கொண்டிருக்கிறது. டோக்கியோ பகுதியில் உள்ள குடி நீரில் அணுத்துகள்கள் கலந்திருக்கும், ஆகவே சிறு பிள்ளைகளுக்கு அங்குள்ள நீர்க்குழாய்களில் வரும் நீரைக் கொடுக்க வேண்டாம் என்று கேட்கப்பட்டுள்ளது.
நேற்று பொது மக்களுக்கு தகவல் விடுத்த ஜப்பானிய பிரதமர் நாற்றோ கான் அணு உலை வெடித்த புக்குசீமா பகுதியில் விளைந்த காய்கறி, பழங்கள், கீரை வகைகள் எதையும் உண்ண வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இன்றய கணக்குகளின்படி டோக்கியோவில் அணுக்கதிர் அளவு உயர்வடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் றீ அக்டர் வெடித்த புக்குசீமா பகுதியில் இயல்புக்கு மாறாக கடும் வெப்பம் நிலவுவதாகவும் ஜப்பானில் உள்ள டேனிஸ் செய்தியாளர் தகவல் தருகிறார்.
காற்றில் வரும் அணுக்கதிர்களுக்கு யாரால் தப்ப முடியும். டோக்கியோவில் 35 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். தற்போது அங்கு பிடிபடும் மீன், விளையும் மரக்கறி, கீரைகள், பாற்பொருட்கள், இறைச்சி எல்லாமே றேடியோ அக்டிவ் ஆபத்தில் உள்ளன. யானையின் மூக்கில் எறும்பு நுழைந்தால் எப்படி அது அலறித் துடிக்குமோ அதே துடிப்பு இன்று ஜப்பானில்.
அன்று மக்களுக்கு ஒரு கவலை இருந்தது. அணு குண்டை வைத்திருக்கும் நாடுகளே உலக வல்லரசுகள் என்று போற்றப்பட்டன. இதனால் ஆசை கொண்டு ஏழை நாடுகள் எல்லாம் அணு குண்டு வெடிக்க துடியாய் துடித்தன. இந்த இழவுகளுக்கு ஒரு முடிவு சட்டென ஒரு நாள் வரும். அணு சக்தி வல்லரசுகள் ஒரே இரவில் படுதோல்வி அடையும் என்றும்,
அதற்கான செய்தியை இயற்கை பிறப்பிக்கும் என்றும் கடந்த பத்து வருடங்களாக எழுதி வருகிறோம். இப்போது ஜப்பானில் சுனாமி வடிவில் வந்த இயற்கை றீ அக்டரை உடைத்து அணுத்துகள்களை காற்றில் பரவ வைத்து ஜப்பானை படுக்கையில் போட்டுவிட்டது.
இந்த நிகழ்வு அணு குண்டையும், அணு உலைகளையும் வைத்துள்ள அத்தனை நாடுகளுக்கும் மரண அடியாக இறங்கியுள்ளது. இனி ஓர் அணு குண்டோ அணு உலையோ நமக்கு வேண்டாம் என்ற இடத்திற்கு உலகத்தை யூ ரேர்ணாக திரும்ப வைத்திருக்கிறது.
இப்படியான ஆபத்தை அறிந்து சென்ற வருடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ரஸ்யா சென்றார். அணு ஆயுதம் இல்லாத உலகத்தை ஏற்படுத்துவோம் என்று அழகு பேச்சு பேசினார். ஆனால் அது அழகுப்பேச்சல்ல அவலப் பேச்சுத்தான். அவர்களுடைய இரகசிய பேச்சை சுனாமி வந்து அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவுக்கு ஓர் அணு குண்டை உருவாக்கிய அப்துல் கலாமிற்கு இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறோம். வெள்ளத்தனையது மலர் நீட்டம் என்று தமிழ் கவிதைகளை உலகுக்கு வைக்கும் தமிழ் அறிந்த அவருக்கு விவேக சிந்தாமணியில் இருக்கும் ஒரு பாடலை இந்த நேரம் நினைவுபடுத்துகிறோம்.
நெருப்பு விளக்கில் இருந்து ஒளி கொடுக்கும்போது சூறைக்காற்று வந்து அதை அடித்து அணைக்கும். அதே நெருப்பு காட்டை எரிக்கும்போது அதே சூறைக்காற்று நெருப்பை வேகமாக வளர்த்துச் செல்லும் – விவேக சிந்தாமணி
அணு சக்தியும் காற்றின் கையில் கிடைத்தால் அது நாடு முழுவதும் பரவலாகிவிடும். எந்தப் பெரிய நாட்டையும் அது தோல்வியில் தள்ளிவிடும். அணு குண்டை உருவாக்கிவிட்டு ஆத்திசூடியை பேசக்கூடாது, ஆத்திசூடியையும், விவேக சிந்தாமணியையும் படித்துவிட்டு அணு குண்டை செய்யாமல் இருந்திருக்க வேண்டும். முதிர்ந்த இந்தியத் தமிழ் ஞானிகள் சொன்ன உண்மைகளை வட இந்தியருக்கு அப்துல்கலாம் விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.
ஓர் அணு குண்டால் உலகப்புகழ் பெற்று ஜனாதிபதியாக வலம் வருவதைவிட அதை உருவாக்காமல் தடுத்து பரதேசியாக வாழ்வது சிறந்த வாழ்வு என்பதை மணிவாசக சுவாமிகள் வாழ்ந்து காட்டியுள்ளார். குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் கோயில் கட்டிய அவரது செயல் அப்படிப்பட்டதே. அப்துல்கலாம் என்ற தமிழன் அணுகுண்டை செய்தான் என்று பெருமைப்படும் இந்தியர்கள் ஜப்பான் சென்று டோக்கியோவில் ஒரு மிடறு தண்ணீர் குடித்து தமது வாய்களை அணுக்கதிர்களால் துப்பரவு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு பழைய துண்டுடன் திருக்குறள் எழுதிய வள்ளுவனின் புகழ் தெரியும்.
ஜப்பானில் ஆக்க சக்திக்காக அணுவை பயன்படுத்தி வந்த விளைவுதான் இது, இதேபோல அழிவு சக்திக்கு பயன்படுத்தினால் வரும் விளைவையும் ஜப்பானே சந்தித்துள்ளது. அணு குண்டை ஜப்பானில் போட்டதும் அதைத் தயாரிப்பதற்கு தலைமை தாங்கிய ஓபன் ஹீமர் , விஞ்ஞானம் தனது கரங்களில் இரத்தத்தை பூசிவிட்டது , என்று கவலையுடன் சொன்னார்.
இன்றைய உலக வல்லரசுகள் செய்துள்ள அத்தனை ஆயுதங்களையும் செய்யலாம் என்று தெரிந்து, அதைச் செய்யாது இருப்பதே சிறந்த வாழ்வென்று சொல்லிப்போன தமிழ் பெருமக்கள் பிறந்த தமிழகத்தை அப்துல் காலம் இனியாவது தென்னிந்தியர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக