Loading

சனி, 12 மார்ச், 2011

நிலநடுக்கம் – சுனாமி – அணுகுண்டு – ஜப்பானுக்கு கிடைத்த தண்டனை


அதர்மத்தின் உச்சியில் நின்று கூத்தாடும் உலக நாடுகளுக்கு இயற்கை விடுத்துள்ள கடைசி எச்சரிக்கை.
நிலநடுக்கம், சுனாமி, அணுக்கசிவு இந்த மூன்று பேரவலங்களும் தனித்தனிய வந்தாலே ஒரு நாடு ஆடிப்போய்விடும். இன்று அதிகாலை வந்து கொண்டிருக்கும் ஜப்பானிய செய்திகள் இந்த மூன்று சம்பவங்களும் அங்கு ஒன்றாக நடைபெற்றிருப்பதை ஐயத்திற்கு இடமில்லாமல் உணர்த்தியுள்ளன.
இன்று ஜப்பானில் நில நடுக்கத்தைவிட பெரு நடுக்கத்துடன் பேசப்படும் விடயம் அணுக்கசிவு. புக்குசீமாவில் உள்ள அணுக்குதத்தின் உலை இலக்கம் ஒன்று, மற்றும் ஒனாக்காவா அணு உலை ஆகியவற்றின் மீது சுனாமி ஓங்கி அடித்திருக்கிறது. அவற்றின் சில பகுதிகள் வெடித்து எரிந்துள்ளன. இதனால் அப்பிரதேசம் முழுவதும் வெண்ணிறப் புகைபோல அணுக்கசிவு பரவத் தொடங்கியிருக்கிறது. ஓர் இடத்தில் ரேடியோ அக்ரிவ் எட்டு மடங்கு உயர்வாகவும் இன்னோரிடத்தில் இருபது மடங்கு அதிகமாகவும் உள்ளது. – பாரதூரமான விடயம்.
டோக்கியோவுக்கு 250 கி.மீ தூரத்தில் உள்ள புக்குசீமா அணு உலை முற்றாக வெடித்து சிதறப் போகிறது என்ற அச்சம் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பான் அணு குண்டு இல்லாத நாடு என்று இதுவரை போட்ட வேடம் ஏறத்தாழ அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டு ஆய்வாளர் இந்த விடயத்தை வாய்க்குள் போட்டு வெற்றிலை குதப்பியது போல குதப்புகிறார்கள். துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுகிறார்கள். இது அபிவிருத்திக்கான அணுசக்தி என்று முத்தாய்ப்பிட துடிக்கிறார்கள். அணுக்கதிர் காற்றில் பரவினால் அது அபிவிருத்தி அல்ல அழிவு சக்திதான்.
ஏறத்தாழ முன்னர் ஜப்பானில் கூரோசீமா, நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டுகள் போல ஆபத்தான அணுக்கசிவும், கதிர்ப்பும் ஏற்பட்டுள்ளன. சுமார் பத்து கி.மீ தூரத்திற்கு மக்கள் அப்பகுதியை விட்டு வெளியே அகற்றப்பட்டுள்ளனர். ஜப்பானியப் பிரதமர் முகத்தில் சுனாமி குறித்து கவலை இல்லை அணு உலைகளால் ஏற்பட்டுள்ள கசிவே மிகப்பெரும் மரண அவலமாக சதிராடுகிறது.
அணு சக்தி என்பது போருக்கும் பயன்படும் ஆக்கத்திற்கும் பயன்படும். ஜப்பானின் இந்த அணு உலைப்பகுதி ஆக்கசக்தியா இல்லை அழிவு சக்தியா என்பது நேற்றுவரை தெரியாமலிருந்தது, ஆனால் இன்றோ அது ஐயத்திற்கு இடமின்றி அழிவு சக்தியாகியிருக்கிறது. துப்பாக்கியால் அழிவுக்குச் சுட்டாலும் மரணம், ஆக்கத்திற்குச் சுட்டாலும் மரணம் என்ற உண்மை நிதர்சனமாகியுள்ளது.
ஜப்பானிய மக்கள் பெரும் பணத்தை செலவிட்டு பேரவலங்களில் இருந்து தப்புவதற்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார்கள். இதுபோன்ற ஓர் அவலம் மற்றய நாடுகளில் நடந்திருந்தால் மில்லியன் கணக்கில் மக்கள் மடிந்திருப்பார்கள். ஆனால் ஜப்பானில் 700 பேர்வரையே மடிந்துள்ளதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிய இராணுவத்தில் இருந்து சுமார் 50.000 பேர் களமிறக்கப்பட்டுள்ளார்கள். மீட்புப் பணிகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அழிவின் பேரழிவை அப்புறப்படுத்தி நாட்டை செம்மைப்படுத்துவது மாபெரும் சவாலாக ஜப்பானிய அரசின் முன் விழுந்துள்ளது. ஆனால் இரண்டு அணு குண்டுகளில் இருந்து விரைவாக மீண்டெழுந்த ஜப்பானிய மக்கள் இந்த அவலத்தையும் வெற்றி கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஒன்றே கைவசமுள்ளது.

நிலநடுக்கம், சுனாமி, அணுக்கசிவு ஆகியவைதான் உலகின் முதல் முக்கிய மூன்று பேரவலங்களாகும். இந்த மூன்றும் ஒரே நாட்டில் இறங்கியுள்ளதே பலத்த சிந்தனையை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து மீண்டெழ உலக நாடுகள் ஜப்பானுக்கு கைகொடுக்க வேண்டும். ஆனால் இன்றைய பொருளாதார நெருக்கடியில் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது கேள்விக்குறி.
ஆனால் இதில் இன்னொரு விடயமும் இருக்கிறது.
.
இயற்கையின் கோபம்பற்றி ஜப்பானிய தலைவர்கள் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த 2001 இருந்து இன்றுவரை உலகில் நிகழ்த்தப்பட்ட அத்தனை அநீதிகளுக்கும் ஜப்பான் நிதி உதவி வழங்கி ஆதரித்திருக்கிறது. அறியாமை மிக்க சிறீலங்கா அரசு ஓர் இலட்சம் அப்பாவிகளை கொன்ற கொலைக் கருவிகளில் ஜப்பானின் பணம் இருக்கிறது. உலகமெல்லாம் மக்கள் வடித்த இரத்தக் கண்ணீரில் ஜப்பானின் பணம் கண் சிமிட்டுகிறது. ஜப்பான் என்றுமே அநீதியின் பக்கம் இருக்கும் நாடுதான் என்ற பெயரை இன்றுவரை அது மாற்றவில்லை.
அதிகாரத்தாலும் பணத்தாலும் ஏழைகளை கொன்று, வெற்றிக் கொடி நிமிர்த்தலாம் ! அது தற்காலிகம் ! ஆனால் இயற்கை என்னும் பேராசான் அதற்கு சமமான பரிசை யாரும் எதிர்பாரத நேரத்தில் கொடுத்துவிட்டுப் போய்விடும்..
எது நடந்தாலும் மற்றவரின் அழிவில் ஒரு காலமும் மகிழ்வு கொள்ளக் கூடாது, அது ஜப்பானிய அழிவுக்கும் பொருந்தும். ஜப்பானிய மக்களின் துயரத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். எதிர் காலத்திலாவது ஜப்பான் தன்னை திருத்திக் கொண்டு அநீதியாளருக்கு துணை போகாமல் இருக்க வேண்டும்.
சன்னதம் தலைக்கேறி தவறு விட்டபோது சுனாமி தமிழரையும் சிங்களவரையும் ஒரு தடவை எச்சரித்திருந்தது. அந்த நேரமே இது இயற்கையின் மிகப்பெரிய கோபம், தயவு செய்து இரு தரப்பும் இதைத் திரும்பிப் பாருங்கள் என்று அலைகளில் எழுதியிருந்தோம். யாருமே கேட்கவில்லை. இப்போது இலங்கைத் தீவு பெரும் அழிவை சந்தித்திருக்கிறது. சுனாமியின் எச்சரிக்கையை இருவருமே அலட்சியம் செய்தனர். அதன் விளைவுகளை அடுத்த கட்டம் காட்டியது.

சுனாமிக்குப் பின் எப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்கு சிறீலங்கா நல்ல உதாரணம் ! அதை ஜப்பானியர் அறிந்து அடுத்த அடி வைக்க வேண்டும்.
ஜப்பானில் நிகழ்ந்த மோசமான விளைவுகள் ஆக்கிரமிப்பாளர் அனைவருக்கும், அனைத்து வல்லரசுகளுக்கும், போலி வல்லரசுகளுக்கும் இயற்கை விட்டுள்ள மிகப்பெரிய சவால். ஜப்பான் தன்னை திருத்தாவிட்டால் சுனாமி பாய்ந்த ஜப்பானின் பொருளாதார வயிற்றில் சீனா பாயும். செத்த எருமையை நரிகள் இழுப்பதுபோல உலக நாடுகள் அத்துடன் கூடி சதையை இழுக்கும்.
சுனாமி நிதியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே மோசடி செய்த கதை நம்மிடம் இருக்கிறது. சுனாமி நிதியை மோசடி செய்யும் இரக்கமற்ற திருடர்கள் நிறைந்த உலகில் ஜப்பானிய சுனாமிக்கு உதவ பணம் கொடுக்கவே பயம் ஏற்படுவது நிதர்சனம்.
நிலநடுக்கம் – சுனாமி – அணுக்கசிவு ஆகிய முப்பெரும் இயற்கைகள் ஒன்றுகூடி விடுத்துள்ள எச்சரிக்கை ஜப்பானுக்கு மட்டுமல்ல முழு உலகிற்குமே இயற்கை அனுப்பியுள்ள கடைசி எச்சரிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக