ஈரானிய அமைச்சர் அப்துல் ஸாலியின் கருத்து இதை மேலும் வலியுறுத்துகிறது…
தற்போது வடக்கு ஆபிரிக்கா – மத்திய கிழக்கு வட்டகையில் பரவியுள்ள மக்கள் புரட்சியானது அணு குண்டை வைத்திருந்தால் ஆட்சியை பாதுகாக்கலாம் என்ற பழையகால எண்ணத்திற்கு பலத்த அடி போட்டு வருகிறது.
மேலை நாடுகளின் சூழ்ச்சியால் தமது நாடு சீரழிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் அணு குண்டை வெடித்துக் கொள்வதே ஒரே வழி என்று கருதிய உலகம் மெல்ல மெல்ல அந்தக் கொள்கை தவறானது என்பதைப் புரிந்து வருகிறது.
இதற்கு சிறந்த உதாரணமாக நேற்று ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் அக்பர் ஸாலி ஜெனீவாவில் விடுத்த அறிவித்தலை நோக்கலாம். ஈரானில் உள்ள புஸ்கார் அணு உலை உருவாக்கக் கட்மைவை தாம் நிறுத்தப் போவதாக ஜெனீவாவில் வைத்து அவர் அறிவித்துள்ளார். அதில் பொருத்தப்படவுள்ள றீ அக்டரை பொருத்த தமது நாட்டுப் பொருளாதாரம் இடம் தரவில்லை என்றும் கூறியுள்ளார். இது ஈரான் ஆடிய நாடகமா இல்லை இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சிந்திப்பது அவசியம்
.இப்போது வட ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்கள் ஈரானிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. எகிப்திய அதிபர், கடாபி போன்றவர்களே ஆட்சியைக் காப்பாற்ற முடியாத நிலை. அணு ஆயுதங்களை கையில் குவித்துள்ள சீனாவே அணு ஆயுதம் தனக்கு பாதுகாப்பானதல்ல என்ற பதட்ட நிலைக்கு வந்துள்ளது.
எனவேதான் அணு ஆயுதத்தால் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நிலையை பரிசீலிக்க வேண்டிய நிலை சகல நாடுகளுக்கும் இயல்பாகவே ஏற்பட்டுள்ளது. சாதாரண துப்பாக்கி வேட்டை மக்கள் மீது பாவித்தாலே போர்க்குற்ற நீதிமன்று படலையைத் தட்டுகிறது. வேறு நாடுகளுக்கு சென்றால் கைது, ஆபத்து போன்றன நிழல் போல விரட்டுகிறது. இன்றய உலகின் அதிகார பீடத்தில் குந்தியிருக்கும் வன்முறை ஆட்சியாளரின் அமைதியும், கர்வமும் மக்கள் போராட்டங்களால் குலைந்து போயுள்ளது. அணு ஆயுதத்தை வைத்து ஒரு பாதுகாப்பை தேட முடியாத நிலையை அவர்கள் இயல்பாகவே உணர்கிறார்கள்.
மேலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஸ்யத் தலைவர்களுடன் அணு குண்டுகளின் எண்ணிக்கைகளைக் குறைப்பது தொடர்பாக ஏற்கெனவே பேச்சுக்களை நடாத்தியுள்ளார். இன்றய உலக சமுதாயம் போகும் போக்கு அந்தப் பேச்சுக்களுக்கு வலுவூட்டுவதாகவே அமைந்துள்ளது. தற்போது சிதைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தனது அணு குண்டுகளை வைத்துக் கொண்டு சாதிப்பதற்கு இனி எதுவும் இல்லை. அப்படியிருக்க ஈரான் மட்டும் அணு குண்டை உற்பத்தி செய்து யாது பயன்..? ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் அக்பர் ஸாலியின் உரை சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற பாணியில் இருப்பதாகவே கருத முடிகிறது.
அணு குண்டால் மக்கள் அழிந்தது ஒரு காலம் மக்களே அணு குண்டுகளை அழிக்கும் புதிய காலத்திற்குள் உலகம் நுழைவது தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக