
மத்திய சிறைகளில் உள்ள கைதிகளிடம் இருந்து, தடை செய்யப்பட்ட மொபைல் போன்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்படுகின்றன. பலத்த கண்காணிப்பையும் மீறி, சிறைக்குள் மொபைல் போன்கள் எப்படி செல்கிறது என்பது, "சிதம்பர ரகசியமாக' தொடர்ந்து வருகிறது.
சென்னை, கடலூர், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் மத்திய சிறைகளில் உள்ள கைதிகளிடம் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. சிறைகளில் கடுமையான கண்காணிப்பு மற்றும் சோதனை இருந்தும், மொபைல் போன்கள் எப்படி உள்ளே செல்கின்றன என்பது, இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.மொபைல் போன்களை பயன்படுத்திய கைதிகள் யாரிடம் பேசினர் என்பது துறை ரீதியான ரகசிய தகவலாக உள்ளன. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்,
பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்கள் சிறையில் இருந்து, தங்கள் "ஆபரேஷன்'களை எளிதாக நடத்த இந்த மொபைல் உதவியாய் இருந்துள்ளது.வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜிவ் கொலை குற்றவாளி நளினி, கடந்த ஓராண்டுக்கு முன் லண்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்ளவர்களிடம் மொபைல் போன் மூலம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில மாதங்களுக்கு முன் அவர் புழல் மத்திய மகளிர் சிறைக்கு மாற்றப்பட்டார்.மற்ற சிறைகளை காட்டிலும், புழல் மத்திய சிறையில் மொபைல் போன்கள் புதையல் போல் கிடைக்கின்றன. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் இரண்டு மொபைல் போன் பிடிபட்டு, வழக்கு பதிவு செய்யப்படுகிறது.கடந்த 2006 நவம்பர் இறுதியில், திறக்கப்பட்ட புழல் மத்திய சிறையில் கைதிகள் எளிதில் தப்பி விட முடியாத படி, பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. சிறை வளாகத்தில் ஐந்து கி.மீ., சுற்றளவிற்கு மின்வேலி, 16 கண்காணிப்பு கோபுரங்கள், போலீசார் ரோந்து சென்று வர தார் சாலை வசதி, நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சோதனை என, உயர் பாதுகாப்பு சூழலுடன் புழல் சிறை இயங்கி வருகிறது.
இத்தனையையும் தாண்டி, கஞ்சா கடத்தல், மொபைல் போன் பயன்பாடு போன்றவை தடுக்க முடியாத நிலையில் தொடர்கிறது. புழல் சிறையில் சராசரியாக 2,600க்கும் மேற்பட்ட கைதிகள் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.மொபைல்போன்கள் மட்டுமல்லாது, வேறு பல ஆயுதங்களும் புழல் சிறையில் பிடிபட்டுள்ளன. கடந்த நவம்பர் 13 மற்றும் 22ம் தேதி, டிசம்பர் 8ம் தேதி, இந்த ஆண்டு ஜனவரி 2 மற்றும் 6ம் தேதிகளில் கைதிகளிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொபைல்போன்கள் எப்படி "உள்ளே' வருகிறது என்ற மர்மம் ஒருபுறம் நீடிக்க, அவற்றை தொடர்ந்து பயன்படுத்த சார்ஜர்கள் எப்படி கிடைக்கின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.சிறையில் வார்டன்களை மிரட்டும் மற்றும் சிறை உத்தரவுகளுக்கு அடங்காத, "ரவுடி கைதிகளை அடக்கவே மொபைல் போன் வழக்கு' போடப்படுகின்றன என்றும், மேலும் சிறையில் வாடகைக்கு மொபைல் போன் கிடைப்பதாகவும், கைதிகளை சந்திக்கும் பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் : புழல் சிறையில் கைதிகளின் மொபைல் போன் பயன்பாட்டை தடுக்க, சிறைத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்பு மற்றும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டாலும், கைதிகளின் ரகசிய மொபைல் போன் நடமாட்டத்தை தடுக்க, "செல் டிடெக்டர்' கருவியும், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் கடத்தலை தடுக்க, "ஸ்கேனிங்' கருவியும் பொருத்தப்பட்டுள்ளன.இருப்பினும், தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதும் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்திற்கு ஏற்ப, நவீன கருவிகளை வாங்கி சிறையில் பொருத்தி, தடை செய்யப்பட்ட பொருள்கள் சிறைக்குள் நுழைவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்; இதற்காக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக