Loading

திங்கள், 31 ஜனவரி, 2011

போலீஸ் கால்சென்டர்,நல்ல முயற்சி


 
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் துவக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் போலீஸ் கால்சென்டரில் நவீன கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு மேலும் தரமான சேவை அளிக்க வகை செய்யப்படும் என்று அந்த நகரத்தின் போலீஸ் கமிஷனர் பி. விஜயன் தெரிவித்துள்ளார்.

சென்ற ஆகஸ்டு 15 முதல் இங்கு போலீஸ் கால் சென்டர் சோதனை அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. இந்த சேவை இப்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து கோழிக்கோடு நகர போலீஸ் கமிஷனர் விஜயன் கூறியது: "இந்த சேவைக்கென 8129000000 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணில் பொதுமக்கள் வாரத்தின் அனைத்து நாள்களிலும் எந்த நேரமும் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்கலாம். இது ஒரு 24 மணி நேர சேவையாகும். இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர், கமிஷனர் உள்ளிட்டோரை சந்திக்க நேரம் கேட்டுப் பெறுவதற்கான வசதி செய்யப்பட்டது. மேலும் புகார் அளிப்பதையும் இந்த எண் எளிமையாக்கியுள்ளது.

வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கலாம்: இந்த சேவையின் செயல் திறனை மேலும் அதிகரிக்க இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் காவல் நிலையத்துக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக புகார் அளிக்கலாம். காவல் நிலையத்துக்கு வரத் தயங்கும் மக்கள் இந்த முறையில் புகார் அளிக்கலாம். மேலும் மக்களின் நேரம், அலைச்சல் ஆகியவையும் மிச்சமாகும்.

மேலும் தாங்கள் ஏற்கெனவே அளித்த புகாரின் தற்போதைய நிலை, நகரில் போக்குவரத்து நிலவரம், போக்குவரத்து நெரிசல் எங்கேனும் ஏற்பட்டுள்ளதா, அதற்கான மாற்றுப் பாதைகள் என்ன, பாதுகாப்பு தொடர்பான விவரங்கள், அது தொடர்பாக நகரில் காவல்துறை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போலீஸ் துறை சம்பந்தமான தகவல்கள் என அனைத்து விவரங்களையும் இந்த கால்சென்டர் மூலம் மக்கள் தெரிந்து கொள்ளலாம். பொது மக்களின் தொலைபேசி அழைப்பு களுக்கு பதிலளிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இந்த கால்சென்டரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் காவல் படை: நகரில் இளம் குற்றவாளிகள் அதிகரித்து வருகின்றனர். கோழிக்கோடு நகரில் 2010-ம் ஆண்டில் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 60 சிறார்கள் கைது செய்யப்பட்டனர். தஙகளது குழந்தைகளின் நடத்தையை கண்காணித்து திருத்த வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் மாணவர் காவல் படை என்ற அமைப்பை அண்மையில் நகர காவல்துறை உருவாக்கியது. பள்ளி மாணவர்களிடம் சமூகப் பொறுப்புணவர்வு மற்றும் ஒழுக்கத்தின் அவசியத்தை உணர்த்தவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இது தேசிய அளவில் பாராட்டுப் பெற்றுள்ளது.

நகரில் மின்னணு கண்காணிப்பு அதிகரிக்கப்படும். ஏற்கெனவே 4 காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர இப்போது மேலும் 16 முக்கிய இடங்களில் காமிரா பொருத்தப்பட உள்ளது' என்றார் விஜயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக