உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவரான பில்கேட்ஸும் மூன்றாவது இடத்தில் உள்ள பங்குச் சந்தை வர்த்தக மன்னரான பப்பெட் ஆகியோர், இந்திய பணக்காரர்களிடம் தர்மத்தை வலியுறுத்தி சமூக சேவையை ஊக்கப்படுத்துவது குறித்து விவாதிக்க இந்தியா வருகை தர உள்ளனர்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரும், சமூக சேவைகளில் சிறந்து விளங்குபவருமான பில் கேட்ஸ், தனது சேவையை சீனா மற்றும் இந்தியாவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, "நான், எனது மனைவி மெலிண்டா, மற்றும் பங்குச் சந்தை வர்த்தக மன்னரான பப்பெட் மூவரும் இந்த வருடம் இந்தியா சென்று, அங்குள்ள பணக்காரர்களிடம் சமூக சேவை செய்வதை ஊக்கப்படுத்துவது பற்றி விவாதிக்க உள்ளோம். இந்த விவாதக் கூட்டம் கடந்த வருடம் சீனாவில் நடந்ததைப் போன்று இருக்கும்.
பப்பெட்ஸும் நானும் அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியனர்கள் பலரை தங்களது செல்வத்தில் பாதியை தங்கள் வாழ்நாளுக்குள் அல்லது தங்கள் இறப்பின் போது சமூக சேவைக்குத் தர வற்புறுத்தி வருகின்றோம். Giving Pledge எனப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு 57 பெரும் பணக்காரர்கள் கையெழுத்திட்டு உள்ளனர். சீனாவில் நடந்த கூட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததைப் போலவே இந்தியாவிலும் இருக்குமென எதிர்பார்க்கிறோம்.
சீனாவின் பணக்காரர்களுக்கு, அவர்கள் வழியில் சமூக சேவை செய்தாலும் எங்களின் முறையைப் பற்றி அறிந்து கொள்ளும் தாகம் அதிகமாக இருந்தது. பணக்காரர்களிடம் தனது செல்வத்தை மற்றவருக்குக் கொடுக்கும் எண்ணம் வளர சிறிது காலம் பிடிக்கும். Giving Pledge போன்ற திட்டங்கள் மூலம் உலகளவில் மனித இனத்திற்குச் சேவை செய்யும் தன்மையை அதிகரிக்க முடியும்.
அமெரிக்காவில் இத்திட்டத்தை செயல்படுத்த அதிக காலம் ஆனது. மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்கள் செல்வத்தை மற்றவருக்குக் கொடுக்க முன்வருகின்றனர்" என்று கூறினார்.
உலக பெரும் பணக்காரர்களில் பில் கேட்ஸ் $53 பில்லியன் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும் பப்பட் $47 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தற்போது $34 பில்லியன் மதிப்புள்ள கேட்ஸ் பவுண்டேஷன் என்னும் சமூக சேவை நிறுவனத்தை நடத்துகிறார். இந்நிறுவனம் வளரும் நாடுகளின் ஆரோக்கியம் சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-இந்நேரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக