வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் சரக்கடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் 'விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம்.
'விக்கி' என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத்தளங்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபிடியாவின் விக்கி வடிவம் தான் விக்கிப்பிடியா. இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை.
உலகப்பந்தில் யாருக்குமே தெரிந்திருக்காத, நம்ம வீடு இருக்கும் தெருவின் வட்டபிரதிநிதிகளை விமர்சித்தாலே, அவர்கள் 'ஆளடி' அருணாவாக உருமாறும் வாய்ப்பிருக்கும் இக்காலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரமும் படைத்த பல நாட்டு அரசாங்கங்கள், வல்லரசுகள் போன்ற பயில்வான்களுடன் மோதும் விக்கிலீக்ஸ் எவ்வளவு மிரட்டல்களையும், சவால்களையும், நிர்ப்பந்தங்களையும் சந்திக்கும் என்பதை எவ்வளவு உயரத்தில் நின்று கற்பனை செய்து பார்த்தாலும் எட்டவே எட்டாது :). 'சர்வ அதிகாரமும் படைத்த' என்று சொல்லப்படும் இந்த அரசாங்கங்கள், தங்கள் விரலசைவில் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகும் போர் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு சரக்கடிக்கப் போய்விடும் ஏகாதிபத்திய தலைவர்கள், இவர்கள் எல்லாருமே விக்கிலீக்ஸ் விஷயத்தில் செமிக்காமல் செருமிக் கொண்டிருப்பது ஏன்?. உலக நாடுகளுக்கெல்லாம் 'அந்தாளு சொல்றத நம்பாதீங்க, அவன் பொய் சொல்றான்' என்று கோவை சரளா போல் கூவிக் கொண்டிருக்கிறாரே அமெரிக்கப் பேரரசாங்கக் காரியதரிசி ஹிலாரி கிளிண்டன், ஏன்?. 'தொழில்நுட்பம்'!!!.
'D. விக்கிலீக்ஸ் விஷயத்தில் தொழில்நுட்பம் தன் விஸ்வரூபமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சட்ட ரீதியான சூட்சுமம் இருக்கிறது. ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டால் ஜனநாயாக நாடுகளில் கூட கடும் தண்டனைகள் உள்ள இக்காலத்தில் உலகிலேயே 'வெட்டிப் போடும்' தண்டனைகளுக்குப் புகழ்பெற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசாங்கப் பதிவுகளைக் கூட பந்தியில் வைத்துச் சந்தி சிரிக்க வைக்கும் விக்கிலீக்ஸ், சட்ட ரீதியான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது?.
விக்கிலீக்ஸ் தனது இணைய வழங்கிகளை (webservers), ஊடகத் தகவல்களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாத சட்டதிட்டங்கள் கொண்ட நாடான ஸ்வீடனில் வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க வழங்கிகளின் மூலம் செயல்பட்டு வரும் டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது. விக்கிலீக்ஸ் நபர்கள் வில்லங்கமான நாடுகளுக்குப் போனால் கைகளுக்குக் காப்பும், மாமியார் வீட்டு விருந்தும் நிச்சயம்.
விக்கிலீக்ஸ் தளத்திற்கு தகவல்கள் அளித்த ஒரு அமெரிக்க இராணுவ வீரருக்கே வாழ்க்கை முழுவதும் சிறைதண்டனைக்கு வாய்ப்பிருக்கும் வேளையில், விக்கிலீக்ஸ் நப்ர்கள் சிக்கினால் சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தே உயிரெடுத்துவிடுவார்கள். இத்தகைய அபாயத்தில் இருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் யார்?, அந்த இணையத் தளம் யார் பெயரில் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது?. தங்களுக்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் நபர்களின் பாதுகாப்புக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன? , அதை நாம் எப்படி உபயோகப் படுத்துவது ;), போன்ற கேள்விகள் குறித்து இனிவரும் பகுதிகளில் காண்போம்....
நன்றி
சுடுதண்ணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக